சிங்கப்பூரில் ஹைட்ரஜனைப் பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான $800 மில்லியன் ஆலையை நிறுவுவதற்கான பணிகள் புதன்கிழமை (அக்டோபர் 23) தொடங்கின.
2050ஆம் ஆண்டுக்குள் கரிமத்தை முற்றிலுமாக ஒழிக்கும் சிங்கப்பூரின் குறிக்கோளுக்குக் கைகொடுக்கும் நடவடிக்கை இந்தத் திட்டம்.
ஜூரோங் தீவிலுள்ள புலாவ் சிராயா மின் நிலையத்தில் இடம்பெறும் அந்த ஹைட்ரஜன் மின் உற்பத்தி நிலையம் 600 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். அதன் மூலம் ஆண்டுக்கு 864,000 நாலறை வீடுகளுக்கு மின்சாரம் அளிக்க முடியும்.
வரும் 2027 டிசம்பர் 31ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. தொடக்கமாக, 50 விழுக்காடு ஹைட்ரஜனையும் 50 விழுக்காடு இயற்கை எரிவாயுவையும் மின் உற்பத்திக்கு அந்த ஆலை பயன்படுத்தும்.
வருங்காலத்தில் ஹைட்ரஜனை மட்டுமே பயன்படுத்தி மின்சாரத்தைத் தயாரிப்பதற்கான குறிக்கோளுடன் அந்த ஆலை செயல்படும்.
சிங்கப்பூரின் மின்சார உற்பத்தி பெரும்பாலும் இயற்கை எரிவாயுவைச் சார்ந்தே உள்ளது.
இருப்பினும், கரிம ஒழிப்பு இலக்கை எட்ட பசுமை வளங்களுக்கு உருமாற வேண்டிய தேவை இங்கு எழுந்துள்ளது.