குடியுரிமை இல்லா இளைஞராக இருந்த 25 வயது திரு ரிக்கோ ரஃபிசுவானுக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசம் வழங்கப்பட்டுள்ளது.
திரு ரஃபிசுவானின் நிலை குறித்து செப்டம்பர் மாதம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது.
அந்தச் செய்தி அறிக்கையில் குடியுரிமை இல்லாதோர் சந்திக்கும் சவால்களைப் பற்றி எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், திரு ரஃபிசுவானுக்கு சிங்கப்பூர் நிரந்தரவாசிகளுக்கான நீல நிற அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
“எனக்கு அடையாள அட்டை கிடைத்துவிட்டது. என்னால் நம்ப முடியவில்லை. இது நனவா அல்லது கனவா என்று எனக்குத் தெரியவில்லை. அடையாள அட்டை கிடைக்க வேண்டும் என்பது எனது நீண்டகால ஆசை,” என்று நா தழுதழுக்க, ஆனந்த கண்ணீருடன் கூறினார் திரு ரஃபிசுவான்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழில் திரு ரஃபிசுவானைப் பற்றிய செய்தியைப் படித்துவிட்டு செயல்பாட்டுப் பிரிவு நிர்வாகியாக திரு ரஃபிசுவானை ஒருவர் தமது நிறுவனத்தில் பணியமர்த்தினார்.
நவம்பர் 4ஆம் தேதியன்று திரு ரஃபிசுவான் வேலையில் சேர்ந்தார்.
வேலையில் சேர்ந்த முதல் நாளிலேயே சிங்கப்பூர் நிரந்தரவாசம் கிடைத்துவிட்டதாக அவருக்குத் தகவல் கிடைத்தது.
தொடர்புடைய செய்திகள்
மருத்துவப் பரிசோதனைகள் உட்பட மற்ற அலுவல்களையும் பூர்த்தி செய்துவிட்டு நவம்பர் 25ஆம் தேதியன்று அவர் தமது அடையாள அட்டையைப் பெற்றுக்கொண்டார்.
திரு ரஃபிசுவான் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வதற்காக அவருக்கு அடையாளச் சான்றிதழும் வழங்கப்பட்டது.