கைதி ஒருவரின் மரண தண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
புதன்கிழமை (பிப்ரவரி 26) அவர் தூக்கிலிடப்பட இருந்தார்.
ஆனால் அதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு (பிப்ரவரி 24) அவரது மரண தண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
கடத்தல் நோக்குடன் 26.29 கிராம் போதைமிகு அபினை ஹம்சா இப்ராகிம் வைத்திருந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டு 2017ஆம் ஆண்டில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
ஹம்சாவின் மரண தண்டனை நிறைவேற்றத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைக்கும்படி அதிபர் தர்மன் சண்முகரத்னம் உத்தரவிட்டார்.
ஆனால், இந்த தற்காலிக நிறுத்திவைப்பு உத்தரவு மரண தண்டனையை ரத்து செய்வதாக ஆகிவிடாது.
அமைச்சரவை வழங்கும் ஆலோசனையின்படி குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அதிபர் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம் அல்லது ரத்து செய்யலாம்.
தண்டனை நிறைவேற்றத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதற்கான கால அளவை முடிவெடுக்கும் அதிகாரம் அதிபருக்கு உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மரண தண்டனை விதிக்கப்பட்ட மற்றொரு கைதியின் மரண தண்டனை நிறைவேற்றம் அண்மையில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
மலேசியரான பன்னீர்செல்வம் பரந்தாமனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை பிப்ரவரி 19ல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அந்த வழக்கைக் கருத்தில் கொண்டு ஹம்சாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையையும் தற்காலிகமாக நிறுத்திவைக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
51.84 கிராம் போதைமிகு அபினைச் சிங்கப்பூருக்குள் கடத்திய குற்றத்துக்காக பன்னீருக்கு 2017ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பிப்ரவரி 20ஆம் தேதி அவர் தூக்கிலிடப்பட இருந்தார்.
ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பு அவரது தண்டனை நிறைவேற்றம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
தமக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து ஹம்சா மேல்முறையீடு செய்தார்.
ஆனால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.
அதையடுத்து, ஹம்சா 2018 நவம்பர் 29ஆம் தேதி கருணை மனு சமர்ப்பித்தார்.
கருணை மனு பரிசீலிக்கப்பட்டது.
ஆனால் 2019 ஜூலை 5ஆம் தேதி அது நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், வழக்கு விசாரணையில் தமக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்று கூறி அதைச் சரிசெய்ய மறுபரிசீலனை விண்ணப்பம் ஒன்றைச் சமர்ப்பிக்க மேல்முறையீட்டு நீதிமன்றத்திடம் ஹம்சா அண்மையில் அனுமதி கேட்டார்.
இவ்வாண்டு பிப்ரவரி 14ஆம் தேதி அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

