சிங்கப்பூரில் உள்ள மாஜு காட்டுப்பகுதியில் அதிகரித்து வரும் நீண்டவால் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் தேசியப் பூங்கா கழகம் (என்பார்க்ஸ்) அந்த விலங்குகளுக்குக் கருத்தடை செய்யும் புதிய நடவடிக்கையை ஜூன் மாதம் தொடங்கியதாகத் தெரிவித்துள்ளது.
குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டுவரும் கண்காணிப்புப் பணிகளுடன் கருத்தடை செயல்பாடும் நடைமுறைப்படுத்தப்படும்.
சன்செட் வே, கிளமெண்டி ரோடு, கிளமெண்டி அவென்யூ 4 ஆகிய பகுதிகளில் வாழும் குடியிருப்பாளர்கள் வழங்கிய கருத்துகளுக்குப் பிறகு இந்த கருத்தடைத் திட்டம் ஆரம்பித்தது என்று தேசிய பூங்காக் கழகம் விளக்கியது.
இந்த முயற்சிகளுக்கு அப்பாற்பட்டு, சம்பந்தப்பட்ட அரசாங்க அமைப்புகள், சமூகங்கள் ஆகியவற்றுக்கு இடையே பல முனைகளில் கழகம் பிரச்சினையை அணுகிவருவதாக அதன் குழும இயக்குநர் ஹாவ் சூன் பெங் கூறினார்.
அவற்றில் குரங்களுக்கு மனிதர்களால் கிடைக்கும் உணவைக் குறைத்தல், அவ்விலங்குகளுடன் நேரடி சந்திப்பு நிகழ்ந்தால் செய்யப்படவேண்டியவை குறித்து குடியிருப்பாளர்களுக்கு புரிந்துணர்வுப் பயிலரங்குகளை நடத்துதல் போன்றவற்றுடன் கண்காணிப்புப் பணிகளைச் செய்வது போன்றவையும் அடங்கும்.
மேலும் விலங்குகளுக்குப் பொதுமக்கள் உணவளிப்பதைத் தடுக்கும் அமலாக்க நடவடிக்கைகளையும் திரு ஹாவ் மேற்கோள் காட்டினார்.
ஆக அண்மையத் தரவுகளின்படி, தீவு முழுவதும் 2017 முதல் 2022ஆம் ஆண்டுவரையில் ஏறத்தாழ 2,500 குரங்குகள் குறித்த புகார்கள் ஓர் ஆண்டில் பெறப்பட்டன. பத்து ஆண்டுகளுக்கு முன் 2016ல் பெறப்பட்ட புகார்களை விட இந்த எண்ணிக்கை 35 விழுக்காடு அதிகம் என்று தெரியவந்தது.


