சட்டவிரோதமாக சாக்கடைகளுக்குள் கழிவுநீரைத் திறந்துவிடுவோருக்கான தண்டனை கடுமையாக்கப்படுகிறது

1 mins read
ee32db2b-35c1-4884-a8cb-70e26b90ae5f
சாக்கடைகள், கால்வாய்கள் ஆகியவற்றை மண், சேறு, கற்கள் போன்றவற்றால் மாசுப்படுத்த காரணமானவர்கள் தொடர்ந்து அக்குற்றங்களைப் புரிந்தால் அதிகபட்சமாக $100,000 அபராதம் விதிக்கப்படலாம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சட்டவிரோதமாக சாக்கடைகளுக்குள் கழிவுநீரைத் திறந்துவிடுவோருக்கான தண்டனை கடுமையாக்கப்படும் என்று நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாக்கடைகளுக்குள் கழிவுநீர் திறந்துவிடப்படுவதைத் தடுக்க இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சாக்கடைகளுக்குள் கழிவுநீர் திறந்துவிடப்பட்டால் அது நியூவாட்டர் தயாரிப்பைப் பாதிக்கும் என்றும் வெள்ளம் ஏற்படுவதற்குக் காரணமாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இக்குற்றத்தைப் புரிபவர்களுக்கான குறைந்தபட்ச தண்டனை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதிகபட்ச தண்டனை உயர்த்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

உதாரணத்துக்கு, பொதுப் பயனீட்டுக் கழகத்தின் அனுமதி இன்றி தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுநீரைச் சாக்கடைகளுக்குள் திறந்துவிட்டு ஊழியர்களுக்குக் காயம் விளைவிப்பதுடன் சாக்கடைகளுக்குச் சேதம் விளைவிக்கும் நிறுவனத்துக்குப் புதிய குறைந்தபட்ச அபராதமாக $40,000 விதிக்கப்படும்.

அதிகபட்ச அபராதம் இருமடங்கு அதிகரித்து $200,000லிருந்து $400,000ஆக உயரும்.

சாக்கடைகள், கால்வாய்கள் ஆகியவற்றை மண், சேறு, கற்கள் போன்றவற்றால் மாசுபடுத்த காரணமானவர்கள் தொடர்ந்து அக்குற்றங்களைப் புரிந்தால் அதிகபட்சமாக $100,000 அபராதம் விதிக்கப்படலாம்.

இதற்கு முன்பு இத்தொகை $50,000ஆக இருந்தது.

சாக்கடைகளுக்குள் நச்சுத்தன்மை கொண்ட, தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவுநீர் திறந்துவிடப்படும்போது நீர்ச் சுத்திகரிப்பு ஆலைகளில் நீரைச் சுத்திகரிக்க பயன்படுத்தப்படும் நுண்ணுயிரிகள் அழிவதாக நாடாளுமன்றத்தில் பேசிய நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்