ரயில் சேவைகளின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் விதமாகத் தொடர்ந்து மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் தண்டவாளத்திற்குக் கீழ் உள்ள கற்களை மாற்றும் பணி தொடங்கியுள்ளது. தண்டவாளத்தின் அடித்தளம் வலுவாக இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
கிட்டத்தட்ட 40 ஆண்டு காலமாகச் சேவையில் உள்ள தண்டவாளக் கற்கள் சேதமடைந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் இப்போது அவை மாற்றப்படுகின்றன.
தண்டவாளத்திற்குக் கீழ் நல்ல கற்கள் இருப்பது மிகமுக்கியமானது. அவை ரயில்களைச் சீராகச் செல்லவும், வேகமாக ரயில்கள் செல்லும்போது தண்டவாளம் நிலையாக இருக்கவும் உதவும்.
மேலும் ரயிலின் எடை தண்டவாளத்தில் சமமாக இருப்பதை உறுதி செய்யக் கற்கள் உதவுகின்றன. தண்டவாளத்தில் ஏற்படும் அதிர்வுகளைக் கற்கள் ஈர்க்கும். அதனால் தண்டவாளம், ரயில் சக்கரம் சேதமடைவது தவிர்க்கப்படும். அதேபோல் இரைச்சல் சத்தமும் குறையும்.
1987ஆம் ஆண்டு வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகளில் சேவைகள் தொடங்கின. கிட்டத்தட்ட 38 ஆண்டுகளாக அந்தப் பாதையில் உள்ள தண்டவாளக் கற்கள் சேவையில் உள்ளன.
அந்தத் தண்டவாளக் கற்களின் வடிவம் உருண்டையாக மாறியுள்ளன, மேலும் அவை கடுமையான எடையைத் தாங்கி வருவதால் சேதமடைந்துள்ளன.
வடக்கு-தெற்கு பாதையில் உள்ள பீஷான் ரயில் நிலையத்தில் டிசம்பர் 11ஆம் தேதி இரவு தண்டவாளக் கற்கள் மாற்றப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
தண்டவாளக் கற்கள் மாற்றப்படும் பணி கடுமையான பணியாகப் பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட 12 ஊழியர்கள் மூன்று மணி நேரம் உழைத்தால்தான் 5 மீட்டர் தண்டவாளத் தூரத்திற்குப் புதிய கற்களை மாற்றமுடியும்.
வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு ரயில் பாதைகள் கிட்டத்தட்ட 205 கிலோமீட்டர் தூரம் கொண்டவை. அதில் 146 கிலோமீட்டர் அதாவது 71 விழுக்காடுப் வெளிப்புறப் பாதை. மீதமுள்ள 59 கிலோமீட்டர் சுரங்கப் பாதை.
பெரும்பாலான சுரங்கப் பாதைகளில் உள்ள தண்டவாளங்களுக்குக் கீழ் ‘கான்கிரீட்’ அடித்தளங்கள் உள்ளதால் அவற்றில் பெரிதாக வேலை இருக்காது.
தற்போது தண்டவாளக் கற்கள் மாற்றும் பணி இரவு நேரங்களில் மட்டுமே நடக்கிறது.
நாள் ஒன்றுக்கு ஏறத்தாழ நான்கு மணி நேரம் அந்த வேலை நடந்துவருவதாக எஸ்எம்ஆர்டி நிறுவனம் தெரிவித்தது.

