புதிதாக எஸ் பாஸ் வழங்குவதை நிறுத்தவேண்டும் என்றும் நிரந்தரவாசிகள் வீவக மறுவிற்பனை வீடுகள் வாங்குவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் தனது தேர்தல் அறிக்கையில் சீர்திருத்த மக்கள் கூட்டணி தெரிவித்துள்ளது.
வெளிநாட்டினர் வருகையைக் கணிசமாகக் குறைப்போம் என்றும் சிங்கப்பூரர்களுக்குப் பணிகளில் முன்னுரிமை வழங்கப்படுவதை உறுதிசெய்வோம் என்றும் அது தனது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சீர்திருத்த மக்கள் கூட்டணி வேட்பாளர் பிரபு ராமச்சந்திரன் மே தினத்தன்று அவ்வறிக்கையை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார்.
ஜனநாயக முற்போக்குக் கட்சி, மக்கள் குரல் கட்சி, சீர்திருத்தக் கட்சி ஆகியவற்றின் கூட்டணியான சீர்திருத்த மக்கள் கூட்டணி ஆறு தொகுதிகளில் 13 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது.
மசெகவின் கொள்கைகள் வெளிநாட்டவர் வருகையைப் பெரிதும் ஆதரிக்கும் வண்ணம் அமைந்துள்ளது என்று அக்கூட்டணியின் தலைமைச் செயலாளர் லிம் தியென் அறிக்கையின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
“சிங்கப்பூரர்கள் தங்களது பணி வாய்ப்புகளை இழந்து சொந்த நாட்டிலேயெ இரண்டாம்தரக் குடிமக்கள்போல உணர்கிறார்கள்,” என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா-சிங்கப்பூர் விரிவான பொருளியல் ஒத்துழைப்பு உடன்பாடு உள்ளிட்ட அறிக்கைகள் சிங்கப்பூர் ஊழியர்களை முடக்கியுள்ளதாகத் திரு லிம் சாடியிருக்கிறார் .
“குறிப்பிட்ட பணியைச் செய்ய சிங்கப்பூரரால் முடியாது என்று நிரூபித்த பின்னரே வெளிநாட்டவரைப் பணிக்கு அமர்த்த வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
வீட்டு விலைகளைக் கட்டுக்குள் வைத்திருப்பது அறிக்கையில் இடம்பெற்றுள்ள மற்றோர் அம்சம். நிரந்தரவாசிகளை வீடு வாங்க அனுமதித்ததே வீட்டு விலை அதிகரிப்பிற்கு முக்கியக் காரணி என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளிகளில் இலவச உணவு, சுகாதாரம், கல்வி தொடர்பான கொள்கைப் பரிந்துரைகளும் அவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன.