தஞ்சோங் பகாரில் இயங்கும் ‘கரிபஃப்’ கடையொன்றில் $2 மதிப்புள்ள அந்த வகை பதார்த்தத்தை வாங்கிய மாது அதற்கு $200 மின்னிலக்க முறையில் கட்டணம் செலுத்திச் சென்றுள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 29ஆம் தேதி தஞ்சோங் பகார் பிளாசா ஈரச் சந்தை, உணவு அங்காடியில் உள்ள ‘ரொலினா’ பாரம்பரிய கரிபஃப் கடையில் மதியம் 1.03 மணியளவில் இச்சம்பவம் நடந்தது.
அக்கடையின் உரிமையாளர்கள் அடையாளம் தெரியாத அந்தப் பெண் வாடிக்கையாளர் குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டு அவரைத் தேடிவருகின்றனர். கூடுதல் பணத்தை வாடிக்கையாளரிடம் திரும்பக் கொடுத்துவிட உரிமையாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
கடையின் மூன்றாம் தலைமுறை உரிமையாளரான ஜொலின், அந்த வாடிக்கையாளர் வெள்ளை நிற ஆடை அணிந்து வந்தார் என்றும் அவரது வயது 30 முதல் 40க்குள் இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
கடையில் அச்சமயம் கூட்டம் வரிசை பிடித்து நின்றிருந்ததாகவும் அவர் அப்போது சிறிது நேரம் அங்கு பணியில் இல்லை எனவும் அவர் விளக்கினார்.
அவரது கணவர் மட்டும் வாடிக்கையாளர்களைக் கவனித்துக்கொண்டிருந்த வேளையில் இந்தக் கூடுதல் கட்டணத்தை அந்த மாது செலுத்திச் சென்றுவிட்டதாக ஜொலின் தெரிவித்தார்.
அவசரத்தில் இது நடந்துவிட்டது எனவும் பிறகு கூட்டம் தணிந்ததும் கட்டணத் தவறு கண்டறியப்பட்டது என்றார் ஜொலின். அந்த மாதை கணவர் உணவு அங்காடி முழுவதும் தேடியும் பலனில்லை. இதுவரை யாரும் கட்டணம் குறித்து கடையைத் தேடி வரவில்லை.
‘ரொலினா’ பாரம்பரிய கரிபஃப் கடையின் தொடர்பு எண்
கூடுதல் கட்டணம் செலுத்திய வாடிக்கையாளரை 92358093 என்ற கைப்பேசி எண்ணில் தம்மைத் தொடர்புகொள்ளும்படி ஜொலின் கேட்டுக்கொண்டார். இன்ஸ்டகிராம் அல்லது ஃபேஸ்புக்கிலும் அவரைத் தொடர்புகொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்தார்.
நேரடியாக கடைக்கு வருவதையும் ஜொலின் வரவேற்கிறார்.

