சிங்கப்பூரிலிருந்து சீனாவின் குவாங்சோவுக்குச் சென்றுகொண்டிருந்த ஸ்கூட் விமானம் 2024 செப்டம்பரில் கடுமையாக ஆட்டங்கண்டதற்கு விமானத்தின் வானிலை கண்காணிப்புக் கருவியில் கண்டறியப்படாத புயலே காரணம் என்று தெரியவந்துள்ளது. விமானம் ஆட்டங்கண்டதில் இருவர் படுகாயம் அடைந்தனர்.
டிஆர்100 விமானத்தில் இருந்த 339 பயணிகள் குவாங்சோவில் உள்ள பையும் அனைத்துலக விமான நிலையத்துக்குச் சென்றனர். கடந்த ஆண்டு செப்டம்பர் 6ஆம் தேதி, காலை சுமார் 8.40 மணியளவில் தரையிறங்கும் சமயத்தில் விமானம் ஆட்டங்கண்டது. அப்போது இருக்கை வாரை அணியும்படி அறிவுறுத்தும் சமிக்ஞை எறியவில்லை.
விமானம் தரையிறங்கிய அதே நாளில் குவாங்சோவைத் தலை நகரமாகக் கொண்ட குவாங்டோங்கில் யாகி புயல் வீசியபோதும் விமானம் ஆட்டங்கண்டதற்கு அது காரணமில்லை என்று கூறப்பட்டது.
அந்த விவரங்கள், இம்மாதம் 4ஆம் தேதி போக்குவரத்துப் பாதுகாப்புப் புலனாய்வுப் பிரிவு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், விமானம் ஆட்டங்கண்டதை ஒரு விபத்தாக வகைப்படுத்தியுள்ளது.
நீளமான விமானத்தின் பின்புறத்தில் புயல் வீசியதால் அது விமானத்தின் வானிலை கண்காணிப்புக் கருவியில் கண்டறியப்படவில்லை என்று தெரியவந்தது. அந்தக் கருவி வழக்கமாக விமானி அறைக்கு முன் இருக்கும் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும்.
ஆகையால், விமானி அறையிலிருந்து புயலைக் காண முடியாமல் போனது.
விபத்தை முன்னிட்டு புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்லும்போது எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று ஸ்கூட் நிறுவனம் மறுஆய்வு செய்கிறது.

