மாத ஊதியமாக $1,000 வரை ஈட்டும் குறைந்த வருமான ஊழியர்களுக்குப் பத்தில் ஆறு தனியார் நிறுவனங்கள் கடந்த 2014ஆம் ஆண்டு குறைந்தபட்சம் $60 ஊதிய உயர்வு அளித்துள்ளன. மேலும், பத்தில் மூன்று நிறுவனங்கள் அந்த ஊதிய உயர்வை நிரந்தரமாக்கி ஊழியர்களின் அடிப்படை ஊதியத்துடன் இணைத்துள்ளன. 2014ஆம் ஆண்டுக்கான தேசிய சம்பள மன்றத்தின் பரிந்துரைகளைத் தொடர்ந்து இந்த ஊதிய உயர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
முழு நேர வேலையின்மூலம் அடிப்படை மாத ஊதியமாக $1,000 வரை ஈட்டும் சிங்கப்பூரர்கள், நிரந்தரவாசிகளின் விகிதம் கடந்த 2012ஆம் ஆண்டு 9.8 விழுக்காடாக இருந்தது. 2014ல் அந்த விகிதம் 6.8 விழுக்காடாகக் குறைந்தது.

