உட்லண்ட்சில் புதன்கிழமை காலை 7 மணியளவில் அங்குள்ள பிஓஎஸ்பி வங்கிக் கிளை அலுவலகத்தின் சுவரைத் துளைத்துக்கொண்டு சாய்ந்த ராட்சத பாரந்தூக்கி ஒரு வழியாக நேற்று அதிகாலை 3 மணிக்கு அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. உட்லண்ட்ஸ் செண்டர் ரோடு, அட்மிரல்டி ரோடு ஆகிய சாலைகளின் சந்திப்பில் இருந்து வளையும்போது ஒரு பக்கமாக சாய்ந்ததால் வழுக்கி சாலையை விட்டு நழுவி சாய்ந்தது. சாய்ந்த பாரந்தூக்கி, அங்கிருந்த வீவக புளோக் 2ஏல் உள்ள பிஓஎஸ்பி கிளையின் கட்டடச் சுவரில் 2 மீட்டர் அகலத்திற்குப் பெரிய ஓட்டை போட்டு விட்டது. நல்ல வேளையாக இந்தச் சம்பவத்தில் உயிர்ச்சேதம் ஏதுமில்லை. பாரந்தூக்கியை அப்புறப்படுத்தும் பணி திறனாளர்களால் நன்கு திட்டமிடப்பட்டு புதன்கிழமை நள்ளிரவில் தொடங்கப்பட்டது. அப்போது அருகேயுள்ள சாலைகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டன.
சாய்ந்து கிடந்த பாரந்தூக்கியை அங்கிருந்து நகர்த்துவதற்கு பின்னிரவு 1.00 மணிக்கு இரண்டு பெரிய பாரந்தூக்கிகள் சம்பவ இடத்திற்குக் கொண்டுவரப்பட்டன. அந்த இரு ராட்சத பாரந்தூக்கிகளில் இருந்து தடிமனான இரும்புக் கம்பிகள் கொண்டு சாய்ந்து கிடந்த பாரந்தூக்கி நகர்த்தப்பட்டது.

