பட்ஜெட் 2016: முதிய சிங்கப்பூரரை வேலையில் சேர்க்க ஊக்கமூட்டும் திட்டம் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு

பட்ஜெட் 2016: முதிய சிங்கப்பூரரை வேலையில் சேர்க்க ஊக்கமூட்டும் திட்டம் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு

1 mins read
320d1f50-62ff-4a81-9663-dc107df84693
-

நிறுவனங்கள் முதிய சிங்கப்பூரர்களை வேலையில் அமர்த்துவதை ஊக்குவிக்க உதவும் சிறப்பு வேலை இணைநிதித் திட்டம் 2019 வரை நீட்டிக்கப்படும் என்று நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் நேற்று நாடாளுமன்றத்தில் அறி வித்தார். உலக மாற்றங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் நிறுவனங்கள் உருமாறிக்கொள்ள ஊக்கமூட்டும் அதேவேளையில், அவற்றின் உடனடி கவலைகளைப் போக்குவதற்கான தனது திட்டங்களின் பகுதியாக அரசாங்கம் இத்திட்டத்தை நீட்டிக்கும் என்று நிதி அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தின்படி, 55க்கும் அதற்கும் அதிக வயதுள்ள, மாதம் $4,000 வரை ஊதியம் பெறும் சிங்கப்பூரர்களை வேலைக்குச் சேர்க்கின்ற முத லாளிகளுக்குச் சம்பளம் ஈடு செய்யப்படும். இந்தத் திட்டம் இந்த ஆண்டில் முடிய இருந்தது.

நீட்டிக்கப்படும் இத்திட்டம் 340,000 ஊழியர்களை உள்ளடக்கும். இது முதிய ஊழியர்களில் நான்கில் மூன்று பங்கு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திட்ட நிதியில் $1.1 பில்லியன் நிரப்பப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். முதிய வயது சிங்கப்பூரர்களிடையே வேலை நியமனம் குறைவாக இருக்கிறது. ஆகையால் இவர்களை வேலையில் சேர்க்க முதலாளிகள் முன்வரவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் திட்டத்தில் ஊழியரின் வயது சேர்க்கப்பட்டுள்ளது. 65ம் அதற்கு அதிக வயதும் உள்ள, மாதம் $3,000க்கும் அதிகம் ஈட்டுகின்ற ஊழியர்களை முதலாளிகள் வேலையில் அமர்த்தும் பட்சத்தில் அவர்களுக்கு ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் 8% வரை இந்தத் தொகை கிடைக்கும். இத்திட்டத்தின்படி இதுவே அதிகமானது.