தேபான் கார்ட்ன்ஸில் உள்ள மூவறை வீட்டில் சுமார் 17 வாடகைதாரர்கள் வரை இருப்பதாக அவ்வீட்டின் முன்னாள் வாடகைதாரர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடந்து வருவதாக சின் மின் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சேமிப்பு அறைகூட வாடகைக்குவிடப்பட்டதாக சீன நாளிதழிடம் கூறினார் முன்னாள் வாடகைதாரர் டியன். 25 வயது நபரான அவர், அந்த வீட்டின் பிரதான வாடகைதாரரிடமிருந்து ஒரு படுக்கையை 250 வெள்ளி மாத வாடகைக்கு எடுத்ததாகக் கூறினார். "நான் அங்கு சென்றபோது, 20 பேருக்கு மேல் அங்கிருப்பதைக் கண்டேன்.
ஒரு படுக்கையறையில் இரண்டு அடுக்கு படுக்கைகள் நான்கு போடப்பட்டிருந்தன," என்று கூறினார். சேமிப்பு அறையில் தம்பதி குடியிருந்ததாகவும் ஆனால், மற்ற வாடகைதாரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக ஏழு மாதங்களுக்கு முன்னர் அவர்கள் காலி செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

