குளிர்சாதனப் பெட்டி வெடித்ததால் மரணம் அடைந்த 22 வயது பங்ளாதேஷ் ஊழியரின் மரணம் தொடர்பாக சிங் வா எண்டர்பிரைஸ் நிறுவனத்துக்கு $150,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஊழியரின் பாதுகாப்பை உறுதிசெய்ய போதிய நடவடிக்கைகளை எடுக்காததன் மூலம் வேலையிட பாது காப்பு, சுகாதார சட்டத்தை மீறிய குற்றத்தை நிறுவனம் ஒப்புக்கொண்டது. திரு அப்துல் ஜெய்னால் சிக்தரும் மேலும் இரு ஊழியர்களும் 2012, ஆகஸ்ட் 15ஆம் தேதி அங் மோ கியோ ஸ்திரீட் 2ல் உள்ள டொஷிபா டெக் நிறுவனத்தின் குளிர்சாதன இயந்திரத்தைச் சரிசெய்யச் சென்றனர். ஒருவர் இயந்திரத்தின் குளிரூட்டிச் சுருளையிலிருந்த ரசாயனத்தைக் கழுவினார். மற்றவர் காற்றழுத்திகளில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ஹைட்ரோகார்பன் வாயுவை சன்னல் வழியாக வெளியேற்றினார்.
பின்னர் அங்கு தரையில் தேங்கிய கழிவுநீரைச் சுத்தம் செய்ய திரு சிக்தர் வாக்யூம் கிளீனரைச் செயல்படுத்த முனைந்தபோது, திடீரென வெடிப்பு ஏற்பட்டது. திறந்திருந்த சன்னல் வழியாக இரு ஊழியர்கள் தப்பினர். திரு சிக்தர் வாசல் கதவு வழியாகத் தப்பினார். மூவரும் தீக்காயங்களுக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். கடுமையான தீக்காயம், நிமோனியாவால் நான்கு நாட்கள் கழித்து திரு சிக்தர் உயிரிழந்தார். ஹைட்ரோகார்பன் திடமான வாயு என்பதால், அது தரையில் படியக்கூடியது என்றும் அதனை வெளியேற்ற கூடுதலான காற்றோட்ட வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் மரண விசாரணை அதிகாரி கூறினார்.

