புக்கிட் பாத்தோக் இடைத்தேர்தலில் மக்கள் செயல் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கும் திரு முரளிதரன் பிள்ளை நேற்று நடைபெற்ற மசெகவின் முதலாவது பிரசாரக் கூட்டத்தில் முக்கிய உரை நிகழ்த்தினார். புக்கிட் பாத்தோக்கை ஒரு பரிவுமிக்க சமூகமாக மாற்றும் அதே வேளையில் எந்தப் பின்னணியைச் சேர்ந்தவராக இருந்தாலும் மக்களுக்கு உதவி கிடைக்க வழி செய்வதே தமது முக்கிய நோக்கம் என்று திரு முரளி கூறினார்.
தம் வாழ்க்கையின் முதல் மதியுரைஞராக காலஞ்சென்ற தொழிற் சங்கவாதியான தமது தந்தையிடமிருந்து எதைச் செய்தாலும் மக்களின் நன்மையைக் கருதிச் செய்ய வேண்டும், அரசியலிலிருந்து விலகும் தருணம் வந்தால் உன் சட்டையைத் தவிர வேறு எதையும் உடன் கொண்டுசெல்லக் கூடாது, மக்களைப் பாரபட்சமின்றி மதிக்க வேண்டும், எத்தருணத் திலும் உண்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்பது போன்ற பண்புகளைக் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.
அடுத்த மதியுரைஞர்களாக புக்கிட் பாத்தோக் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற டாக்டர் ஓங் சிட் சுங், ஜூரோங் குழுத்தொகுதியின் முன்னாள் தலைமை அமைச் சரான திரு லிம் பூன் ஹெங் ஆகியோரை திரு முரளி குறிப்பிட்டார். "அவர்களது சீரிய தலைமைத் துவப் பண்புகள் புக்கிட் பாத்தோக்கில் அடித்தளத் தலைவராக இருந்த என்னை மிகவும் கவர்ந்தன. அதன் மூலம் அரசியல் என்பது ஒரு பணி அல்ல; அது ஓர் உன்னதமாக கடமை என்பதை உணர்ந்தேன்," என்று திரு முரளி விவரித்தார்.

