ஜூரோங் வெஸ்ட் பகுதியில் வசிக்கும் முஸ்லிம்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் மாரூஃப் பள்ளிவாசல் இவ்வாண்டு செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்புவகிக்கும் அமைச்சர் டாக்டர் யாக்கூப் இப்ராஹிம் கூறியுள்ளார். ஹஜ்ஜுப் பெரு நாளுக்கு முன்னதாக இந்தப் பள்ளிவாசல் கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது 90 விழுக்காட்டுப் பணிகள் நிறைவுற்றிருக்கும் நிலையில், நேற்று அமைச்சர் யாக்கூப் பள்ளிவாசலைப் பார்வையிட்டார். சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் அதிகாரிகளும் அவருடன் பார்வையிட்டனர். இவ்வாண்டு இறுதிவாக்கில் பள்ளிவாசலில் கட்டுமானப் பணிகள் நிறைவுறும் எனக் கூறப்பட்டிருந்தது. சுமார் $16.8 மில்லியன் செலவில் கட்டப்படும் இந்தப் பள்ளிவாசல் 2,500 சதுரமீட்டர் பரப்பளவுடன் கிட்டத்தட்ட 4,500 பேர் வழிபாடு நடத்துவதற்கு ஏதுவானதாக இருக்கும்.

