எல்லா நகர மன்றங்களும் மாதாந்தர சேவைப் பராமரிப்புக் கட்டணத்திலிருந்து கூடுதல் தொகையை ஆதார நிதியில் ஒதுக்கி வைக்கவேண்டும், குறிப்பாக மின்தூக்கிகளை மாற்றுவதற்காக, என தேசிய வளர்ச்சி அமைச்சர் லாரன்ஸ் வோங் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்கு மாடிக் கட்டடங்களில் மின்தூக்கி பழுதடையும் சம்பவங்களும் விபத்துகளும் அடுத்தடுத்து நடந்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மின்தூக்கிகளின் பராமரிப்பையும் பாதுகாப்பையும் மேம்படுத்த கட்டடக் கட்டுமான ஆணையம் அமல்படுத்திய நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும். மின்தூக்கிகள் பழுதடைந்த சம்பவங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குத் திரு வோங் பதிலளித்தார்.
மின்தூக்கி பராமரிப்பையும் மின்தூக்கியை மாற்றும் பணியையும் முடுக்கிவிடுவதற்குக் கூடுதல் செலவாகும் என்று திரு வோங் சுட்டிக்காட்டினார். மின்தூக்கிகளில் கண்டிப்பான பரி சோதனைகளை இடைவிடாது மேற்கொள்ளவும், தேய்ந்துபோன பாகங்களையும் பழைய மின்தூக்கிகளையும் மாற்றவும் போதிய நிதி இருப்பதை உறுதிப்படுத்த நகர மன்றங்கள் முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்படவேண்டும் என்றார் அவர்.

