சிங்கப்பூர் போஸ்ட் (சிங்போஸ்ட்) நிறுவனம் புதிய 'பொது பார்சல் பெட்டகச் சேவை' ஒன்றை நேற்று அதிகாரபூர்வ மாகத் தொடங்கியது. சில்லறை வர்த்தகர்களும் பயனீட்டாளர்களும் அந்தப் பெட்டகத்தில் தாங்கள் அனுப்ப வேண்டிய பொருட்களை, கடிதங்களைச் சேர்க்கலாம். தங்களுக்கான பார்சல்களை, கடிதங்களை அதிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரில் சுமார் 140 இடங்களில் POPStation என்ற அந்தப் பெட்டகத்தை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். 24 மணி நேரமும் அதைப் பயன்படுத்தலாம் என்று சிங்போஸ்ட் தெரிவித்துள்ளது. வீடமைப்பு வளர்ச்சிக் கழக கடைத் தொகுதிகள், சமூக நிலையங்கள், உயர்கல்வி நிலையங்கள், அஞ்சல் அலுவலகங்கள் போன்ற வர்த்தக அக்கம்பக்க வட்டாரங்களில் அந்த இடங்கள் உள்ளன. கடிதங்கள், பொருட்களை அனுப்பவும் பெறவும் இந்தப் புதிய ஏற்பாடு மிகவும் வசதியாகவும் நேரத்தை மிச்சப் படுத்துவதாகவும் இருக்கும் என்கிறது சிங்போஸ்ட்.

