கோர விபத்து: ஒருவர் பலி

கோர விபத்து: ஒருவர் பலி

2 mins read

சாங்கி கோஸ்ட் சாலையில் நேற்று காலை கார் ஒன்று மரத்­தில் மோதியதில் வாகனமோட்டி உயிர் இழந்தார். ஐவர் காய­மடைந்த­னர். இந்தச் சாலை விபத்து குறித்து நேற்று காலை 6.35 மணிக்கு தமக்கு தகவல் கிடைத்­த­தாக குடிமைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது. சம்பவ இடத்­திற்கு ஒரு தீயணைப்பு வாகனம், இரண்டு துணை வாக­னங்கள், ஐந்து ஆம்­பு­லன்ஸ்­கள், ஒரு சிவப்பு ரைனோ வாகனம் அனுப்பப்­பட்­டன. காரில் சிக்­கிக்­கொண்ட 21 வயது கடற்படை வீரர் யுக்கியோ மட்சோ என்ற ஓட்­டு­நரை இரும்பு வெட்டும் சாத­னங்களைக் கொண்டு குடிமைத் தற்­காப்­புப்­ படை­யி­னர் விடு­வித்­த­னர். அவர் சம்பவ இடத்­தி­லேயே மாண்ட­தாக அங்­கி­ருந்த மருத்­து­வ முதலுதவிக் குழு அறி­வித்­தது.

அவரின் தந்தை ஜப்பானியர் என்றும் அவரின் தாயார் சிங்கப்பூரர் என்றும் சீன நாளிதழான லியன்ஹ வான்பாவ் நேற்று தெரிவித்தது. யுக்கியோ அவரது தாயாரின் 'சுபாரு' காரை அவர் ஓட்டிச் சென்றதாக கூறப்பட்டது. யுக்கிகோ மட்சோ சாதுவானவர் என்றும் தனது குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புவார் என்றும் அவரின் வீட்டு உதவியாளர் தெரிவித்தார். மட்சோவின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் கடல், கடல்துறையில் பயின்ற தாகவும் சென்ற ஆண்டுதான் சிங்கப்பூர் கடற்படையில் வேலைக்கு சேர்ந்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. விபத்­தில் காயம் அடைந்த மேலும் ஐவர் சாங்கி பொது மருத்­து­வமனைக்கு கொண்டுச் செல்­லப்­பட்­ட­னர்.

ஐவரில் இருவர் சுய­நினை­வற்ற நிலையில் கொண்­டு­ செல்­லப்­பட்­ட­தாகத் தெரி­விக்­கப்­பட்­டது. விபத்து நடந்த சாலையில் பேருந்­தில் பயணம் செய்து கொண்­டி­ருந்த நூர் இஸ்­கந்தர் சம்ப­வத்தை வீடியோ எடுத்து ஃபேஸ்­புக் பக்­கத்­தில் பதி­வேற்­றம் செய்­தி­ருந்தார். போலிஸ் விசாரணை தொடர்­கிறது.