முதன் முறையாக 'ஆட்டிசம்' எனும் கற்றல் குறைபாடு உடைய பெரியவர்களுக்கு உதவ சிங்கப்பூர் ஆட்டிசம் வள நிலையமும் சிங்கப்பூர் ஆட்டிசம் கழகமும் கைகோத்துள்ளன. அவை நேற்று நடத்திய முதல் நிதித் திரட்டு விழாவில் $600,000க்கு மேல் நிதி திரண்டது. இந்த நிதி ஆண்டுக்கு $1 மில்லியன் நடப்புப் பற்றாக்குறையில் செயல்படும் மேற் கண்ட இரு தொண்டு அமைப்புக ளுக்கும் பகிர்ந்து கொடுக்கப்படும்.
"மிகச் சிறந்த ஒரு நடை 2016" எனும் அந்த நிகழ்ச்சியில் சிறப்பு கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதில் நடந்த கேளிக்கை நிகழ்ச்சிகளிலும் 2,000க்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அமெரிக்காவின் பிரசித்தி பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பாடகர் குழு இசைக் கச்சேரி மூலம் பார்வையாளர்களை மகிழ்வித்தது. சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் டான் சுவான் ஜின்னும் பிரதமர் லீ சியன் லூங்கின் துணைவியார் திருமதி ஹோ சிங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். திருமதி ஹோ சிங், ஆட்டிசம் வள நிலையத்தின் ஆலோசகரும் ஆட்டிசம் கழகத் தின் புரவலராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
ஆட்டிஸம் வள நிலைய ஊழியருடன் (வலக்கோடி) உரையாடும் (இடமிருந்து) ஆட்டிசம் வள நிலையத்தின் தலைவரும் ஆட்டிஸம் கழகத்தின் உறுப்பினருமான திருவாட்டி டென்னிஸ் புவா, அமைச்சர் டான் சுவான் ஜின், திருமதி ஹோ சிங். படம்: பாத்லைட் பள்ளி

