'மேபேங்க்' ஊழியர்களின் முயற்சியால் $200,000 பண மோசடி சம்பவம் ஒன்று முறிய டிக்கப்பட்டது. போலிஸ் நேற்று இந்தத்தகவலை வெளியிட்டது. 72 வயது மூதாட்டி ஒருவர் ஆகஸ்ட் 2ஆம் தேதி, வங்கி கணக்கு ஒன்றுக்கு பணம் மாற்று சேவைக்காக பீப்பள்ஸ் பார்க் செண்டரில் அமைந்துள்ள 'மேபேங்க்' வங்கிக்கு சென்றார். குடிநுழைவுச் சிக்கலை எதிர் நோக்கியிருந்த தமது நண்பருக்கு உதவ வேண்டியிருப்பதாக அவர் வங்கி ஊழியர்களிடம் கூறினார். மூதாட்டியிடம் இருந்து விவரத்தை அறிந்த வங்கி ஊழியர்களான குமாரி டோரின் ஓங்குக்கும் குமாரி கிரிஸ்டின் டிங்குக்கும் இவ்வளவு தொகை மாற்றம் பற்றிய சந்தேகம் எழுந்தது. உடனே போலிஸுக்கு தகவல் தந்தனர்.
வர்த்தக விவகாரத்துறை மத்திய பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட மூதாட்டி முகம் தெரியாத நபர் ஒருவருடன் ஃபேஸ்புக், 'வாட்ஸ்அப்' வாயிலாக 5 வருடங்களுக்கு மேலாக தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. மேலும் அவர் அந்த நபருக்கு $75,500 பணம் மாற்றம் செய்துள்ளளார். போலிஸ் விசாரணை தொடர்கிறது. இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொது மக்களுக்கு போலிஸ் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது. இணையத்தில் சந்திக்கும் முகம் தெரியாத நபர்களை நம்பி அவர்களுக்கு பணம் உதவி செய்ய முற்படாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்குகள் பற்றிய விவரங்களை மற்றவர்களுடன் தேவையில்லாமல் பகிர்ந்து கொள்ளாதீர்கள். வெளியூரில் இருப்பவர் தான் பிரச்சனையில் இருப்பதாகக் கூறி தனக்குப் பண உதவி வேண்டும் என்று கோரிக்கை விடுத்தால், போலிஸிடம் முதலில் தெரி வியுங்கள்; பண மாற்றத்தில் ஈடுபடாதீர்கள் போன்ற ஆலோசனைகளைப் போலிஸ் கூறியது.

