சிங்கப்பூரில் முதியோருக்கு மறுவேலை வாய்ப்பு வழங்கும் சட்டம் அமலாவதற்கு கிட்டதட்ட ஓர் ஆண்டு இருக்கும் நிலையில், தொழிற் சங்கங்களைச் சார்ந்த நான்கில் மூன்று பங்கு நிறுவனங்கள் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு மறு வேலைவாய்ப்பு வழங்கும் பணியைத் தொடங்கி விட்டன. இந்த விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாக தொழிலாளர் இயக்கம் நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரில் மறு வேலைவாய்ப்பு வயது 65லிருந்து 67ஆக அடுத்த ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் உயர உள்ளது. தற்போதைய நிலையில் 62 வயதை எட்டும் தகுதியுள்ள ஊழியர்களுக்கு 65 வயதுவரை மறு வேலைவாய்ப்பு வழங்க நிறுவனங்கள் கடமைப்பட்டுள்ளன.
இது பற்றிக் கூறிய தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் தலைமைச் செயலாளர் ஹெங் சீ ஹாவ், "இது ஒரு நல்ல முன்னேற்றம்,'' என்று குறிப்பிட்டார். ''சிங்கப்பூரில் ஊழியர் அணி சிறியது. விரிவடைய எண்ணும் நிறுவனங்கள் ஊழியர்கள் கிடைப்பது சிரமமாக இருப்பதாக கூறுகின்றன. இதில் அனுபவம் வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பது மேலும் சிரமமான பணி," என்றார் அவர். "மற்ற நாடுகள் முதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் சீக்கிரமாக ஓய்வு பெற்றால் அவர்களுக்கு மாற்றாக மற்ற நல்ல ஊழியர்கள் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என்பதை உணர்ந்துள்ளன,'' என்றும் திரு ஹெங் குறிப்பிட்டார்.