50.39 வினாடிகளுக்கு தொலைக் காட்சித் திரையிலேயே அவரது கவனம் குவிந்திருந்தது. அவரைச் சுற்றியிருந்தவர்கள் மகிழ்ச்சி ஆர வாரத்தில் துள்ளிக் குதிக்க, அவர் மட்டும் வாயை கைகளால் மூடிக் கொண்டு நின்றிருந்தார். எல்லாம் முடிந்ததும் மகிழ்ச்சிப் புன்னகையுடன் இருக்கையில் அமர்ந்த அவரது கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்தது. தமது மகன் ஜோசஃப் ஸ்கூலிங் சிங்கப்பூரின் முதல் தங்கப் பதக்கத்தை வென்று வரலாற்றில் இடம்பிடித்த மந்திரத் தருணம் அது. நேற்றைய நேரடி ஒளிபரப்பைக் காண திரு கோலின் ஸ்கூலிங் தனது மகனின் உற்ற தோழனும் தேசிய நீச்சல் வீரருமான டியோ ஸென் ரென்னின் வீட்டில் கூடி இருந்தார். போட்டி முடிந்ததும் அவர் கூறிய முதல் வார்த்தைகள், "அனைவருக்கும் நன்றி!".
உடல் நலம் சரியில்லாததால் 68 வயது கோலின் ஸ்கூலிங் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் ரியோ டி ஜெனிரோவுக்குச் செல்லவில்லை. 61 வயது தாயார் மே ஸ்கூலிங் மட்டும் சென்றுள்ளார். போட்டி முடிந்தபிறகு தனது மகனிடம் அவர் கூறிய முதல் வார்த்தைகள், "மகனே, நாட்டிற்கு மிகப்பெரிய பெருமையை நீ சேர்த்திருக்கிறாய்," என்பதுதான். போட்டிக்குமுன் அவர் தனது மகனிடம், "நீ இந்த உலகத்தை மூக்கின்மேல் விரல் வைக்கச் செய்யவேண்டும்," என்று கூறியிருந்தார் தந்தை. அவரது தாயார் மே, "அனைத்தும் சரியாக நடந்தால் சிங்கப்பூரே கொண்டாடும்," எனச் சொன்னார். போட்டி முடிந்து ஊடகப் பேட்டிகளும் முடிந்தபிறகு தம் தந்தையுடன் தொலைபேசியில் பேசிய ஸ்கூலிங், "நன்றி அப்பா, அனைவருக்கும் என் அன்பைத் தெரிவியுங்கள். உங்களுக்கும் என் அன்பு உரித்தாகுக!" என்றார்.
தம்மை இவ்வுலகிற்கு ஈன்று தந்து, உணவுடன் அன்பும் ஊக்கமும் அளித்து சீராட்டி பாராட்டி வளர்த்து இன்று பெருமிதத்திலும் பூரிப்பிலும் இருக்கும் தம்முடைய தாய் மே ஸ்கூலிங்.

