சிங்கப்பூரில் பல்வேறு இனத்தவர் தங்களது கலாசார, சமய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது மற்ற இனத்தவரின் நலனை எண்ணிப் பார்ப்பவர்களாகவும் உள்ளனர். அதற்கு உதாரணமாக, ஏழாவது மாதத் திருவிழாவைக் கொண்டாடும் சீனர்கள் திறந்த வெளிகளில் நறுமணக் காகிதங்களை எரிப்பதற்குப் பதிலாக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அடுப்புகளில் எரிக்கின்றனர் என்று பிரதமர் லீ சியன் லூங் கூறினார். அக்கம்பக்கத்தாருக்கு இடையூறு விளைவிக்காமல் இருப்பதற்காக முஸ்லிம்கள் பள்ளிவாசல்களில் தொழுகை மேற்கொள்வதற்கான அழைப்பை குறைவான சத்தத்தில் விடுப்பதையும் இந்துக்கள் தைப்பூசத் திருவிழாவில் பக்தர்கள் செல்லும் வழியில் நிர்ணயிக்கப்பட்ட சில இடங்களில் மட்டும் இசைக் கருவிகளை இசைப்பதையும் திரு லீ குறிப்பிட்டார்.
இன நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தையும் பிரதமர் லீ கோடிட்டுக் காட்டினார். "அனைவரையும் உள்ளடக்கிய பல இனச் சமூகத்தின் முக்கியத்துவத்தையும் சமுதாய நல்லிணக்கத்தைக் கட்டிக்காப்பதற்காக சமரசம் செய்யவேண்டியிருப்பதையும் சீன சமூகம் உள்ளுணர்வுடன் புரிந்துள்ளது. அனைத்து இனத்தினருக்கும் இது இரண்டாவது இயல்பாகவே அமைந்துள்ளது," என்றும் திரு லீ விளக்கினார்.

