கடந்த இரண்டு வாரங்களாக உலகெங்கும் உள்ள விளையாட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்த ரியோ ஒலிம்பிக்ஸ் நேற்று நிறைவடைந்தது. ஒலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவை முன்னிட்டு பிரேசிலின் புகழ் பெற்ற மரகானா விளை யாட்டரங்கம் ஒளி வெள்ளத்தில் மூழ்கியது. விழாவின்போது கனமழை பொழிந்தபோதிலும் நிகழ்ச்சியை நேரில் கண்டு மகிழ வந்தவர்கள், நிகழ்ச்சியில் பங்கெடுத்தவர்கள் ஆகியோரின் உற்சாகம் இம்மியளவும் குறையவில்லை. பிரேசிலிய பாரம்பரிய இசை, நடனம், உடைகள், ஒளிக் காட்சிகள் ஆகியவற்றுடன் அரங் கம் களைகட்டியது. இவ்வாண்டின் ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்திய ரியோ டி ஜெனிரோ நகரம் கோலாகலமான முறையில் விடைகொடுத்தது.
தோக்கியோவில் 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி
2020ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டியை நடத்தும் பொறுப்பை நிறைவு விழாவின்போது ஜப்பான் தலைநகரம் தோக்கியோவிடம் ரியோ ஒப்படைத்தது. நிறைவு விழா முடிவதற்கு முன்பு தோக்கியோ நகரின் ஆளுநர் ஒலிம்பிக் கொடியை அதிகாரபூர்வமாகப் பெற்றுக் கொண்டார். ஆனால் அதற்கு முன்பு யாரும் எதிர்பாராத ஓர் இன்ப அதிர்ச்சி அரங்கேறியது. நிறைவு விழாவுக்கு தாம் நேரத்தோடு வரமுடியாது என்று ஜப்பானியப் பிரமதர் ஷின்சோ அபே கூறும் காணொளி ஒன்று அரங்கில் ஒளிபரப்பப்பட்டது.
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி பல சவால்களை முறியடித்து வெற்றிகரமாக நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் இருந்த கோலாகலம் இதனைப் பிரதிபலித்தது. பிரேசிலியப் பாரம்பரிய இசை, நடனம், ஆடைகள் ஆகியவை மரகானா விளையாட்டரங்கத்திற்கு உயிரூட்டியது. பிரம்மாண்டமான வாணவேடிக்கை மூலம் நிறைவடைந்த ரியோ ஒலிம்பிக் போட்டி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது என்றால் அது மிகையன்று. படம்: ராய்ட்டர்ஸ்

