வில்சன் சைலஸ்
நாட்டின் புதல்வனாக சிங்கப்பூரர் களின் மனதில் நீங்கா இடம் பிடித்த முன்னாள் அதிபர் எஸ் ஆர் நாதனின் மறைவு நாட்டையே வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்து வதற்காக அமைச்சர்கள் முதல் நண்பர்கள் வரை பலரும் சிலோன் ரோட்டிலுள்ள அவரது இல்லத் தில் நேற்று குவிந்தனர். கடந்த மாதம் 31ஆம் தேதி, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு சிங்கப்பூர்ப் பொது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட 92 வயது திரு நாதன், நேற்று முன் தினம் இரவு 9.48 மணிக்குக் காலமானார். நேற்றுக் காலை சுமார் 10.45 மணிக்கு சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனையிலிருந்து திரு நாதனின் நல்லுடல் அவரது இல் லத்திற்குக் கொண்டு வரப்பட்டது.
ஓய்வுபெற்ற கௌரவ மூத்த அமைச்சர் கோ சோக் டோங், பிரதமர் லீ சியன் லூங், துணைப் பிரதமர்கள் டியோ சீ ஹியன், தர்மன் சண்முகரத்னம், முன்னாள் அமைச்சர் எஸ் தனபாலன் உட்பட முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் வந்து திரு நாதனுக்கு இறுதி மரியாதை செய்து, அவருடைய குடும்பத்தா ருக்கு ஆறுதல் கூறினர். 1999ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட அழைத்த போது திரு நாதன் அழுதுவிட்டார் என திரு நாதனின் துணைவியார் திருமதி ஊர்மிளாவிற்கு அனுப் பிய இரங்கல் கடிதத்தில் திரு கோ சோக் டோங் குறிப்பிட்டுள் ளார்.
அதிபர் பதவிக்குப் பொருத்தமானவராக திரு நாதனை அப்போதைய மூத்த அமைச்சர் அமரர் லீ குவான் இயூ பரிந்துரைத்ததை நினைவுகூர்ந்த அவர், துணிச்சல், ஆற்றல், மக்களுடன் பழகும் திறன் ஆகிய பண்புகள் எழுத்தராகப் பணியாற்றிய திரு நாதனை அதிபராக உயர்த்தின என்றார். "அவருடனான எனது பல ஆண்டுகால நட்புறவு மூலம் நண்பர்களுக்கும் சக ஊழியர்களுக்கும் அவர் உண்மையானவராக இருந்ததை நான் அறிவேன்," என்றும் அவர் கூறினார்.

