அடுத்தாண்டு பிப்ரவரி முதல் சாலை வரி வில்லை ஒட்டத் தேவையில்லை

அடுத்தாண்டு பிப்ரவரி முதல் சாலை வரி வில்லை ஒட்டத் தேவையில்லை

1 mins read
f14f919b-14e3-4b36-ba93-5d8abb029e06
-

வாகனமோட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சாலை வரி வில்லையை (படம்) தங்கள் வாகனத்தில் காட்சிக்கு வைக்கத் தேவையில்லை என்றும் அடுத்த பிப்ரவரி 15ஆம் தேதி முதல் ஆணையம் வரி வில்லை வழங்காது என்றும் நிலப் போக்கு வரத்து ஆணையம் நேற்று அறிவித்தது. இப்போதிலிருந்து, அடுத்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி வரை, வாகனமோட்டிகள் சாலை வரி செலுத்தியதைக் காட்டும் வரி வில்லையைப் பெறவேண்டியிருக்கும். அதன் பிறகு, அவர்கள் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற நினை வூட்டல் கடிதம் மட்டும் அனுப்பப்படும்.

வழக்கமான முறைகளில் கட்டணங்களைச் செலுத்தி வந்த வாகனமோட்டிகள், அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் சாலை வரி கட்டணத்தை 'ஏஎக்ஸ்எஸ்' (AXS) கைபேசிச் செயலி மூலமாகவும் இணையம் வழியாகவும் செலுத்தலாம். வாகனமோட்டிகளின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த புதிய சேவையை அறிமுகம் செய்வதாக ஆணையம் கூறியது. சாலை வரி செலுத்தாமல் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். அத்துமீறுவோர் அதிகபட்சம் $2,000 அபராதம் செலுத்தவேண்டியிருக்கும். மலேசியாவிற்கு பயணம் மேற்கொள்ள விரும்பும் வாகனமோட்டிகள் நகல் எடுக்கப்பட்ட சாலை வரி வில்லை கொண்டு செல்லுமாறு ஆணையம் அறிவுரை கூறியது. மின்னஞ்சல் நினைவூட்டல்களை விரும்பும் வாகனமோட்டிகள் www.onemotoring.com.sg இணையத் தளத்தில் பதிவு செய்யலாம்.