உள்ளூரில் 'ஸிக்கா' கிருமி தொற்றிய செய்தி முதன்முதலில் அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்திற்குள் குடியிருப்பாளர்கள் திறந்தவெளி உணவு நிலையங்களைத் தவிர்க்கத் தொடங்கிவிட்டனர். 'தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்' செய்தியாளர்கள் நேற்று மதிய உணவு நேரத்தில் மெக்பர்சன் சந்தை, உணவு நிலையத்திற்குச் சென்றபோது ஏகப்பட்ட மேசைகள் காலியாக இருந்தன. மக்கள் கூட்டமும் காணப்படவில்லை. அல்ஜுனிட் கிரசன்ட், சிம்ஸ் டிரைவ் வட்டாரங்களுக்குப் பிறகு 'ஸிக்கா' தொற்று பரவியிருக்கும் பாய லேபார் வே-யின் மையப்பகுதியில் உணவு நிலையம் அமைந்திருக்கிறது. சைவ உணவுக்கடையில் வேலை செய்யும் 41 வயது குமாரி சிண்டி சென், ஸிக்கா பரவல் செய்தி வெளிவந்த பிறகு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உத்தேசமாக 40 விழுக்காடு குறைந்துவிட்டதாகக் கூறினார்.
அவரும் அவரது முதலாளியான 49 வயது திரு எட்வின் லீ-யும் ஸிக்கா தொற்றைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். சர்க்கியூட் சாலை உணவு நிலையத்தில் சைவ உணவுக்கடை நடத்தும் திருவாட்டி போ போ கெக். வியாபாரம் முன்பைவிடப் பாதிக்கும் மேலாகக் குறைந்து விட்டதாகச் சொன்னார். ஆனால், கெடுபிடியான வாகன நிறுத்த நடவடிக்கைகள் போன்ற மற்ற காரணங்களும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என அந்த 62 வயது கடைக்காரர் ஒப்புக்கொண்டார்.
இந்த உணவு நிலையம் பாய லேபார் வே-க்கும் காலாங் வே-க்கும் நடுவில் உள்ளது. ஆனால், பூச்சி விரட்டித் திரவத்தைத் தடவிக்கொள்ளவேண்டிய அவசியம் இருப்பதாக அவர் கருதவில்லை. 'ஸிக்கா' கிருமி இன்னமும் பரவாத பொங்கோல் வட்டாரத்தில் அவர் குடியிருப்பது இதற்குக் காரணம். இதற்கிடையே, சிங்கப்பூரில் 'ஸிக்கா' தொற்றிய வர்களின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமையன்று 82 ஆக உயர்ந்ததைத் தொடர்ந்து, கர்ப்பிணிகள் அல்லது கருத்தரிக்க முயற்சி செய்பவர்கள் சிங்கப்பூருக்குப் பயணம் செல்வதைத் தவிர்க்குமாறு அமெரிக்காவும் தென்கொரியாவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. முன்னதாக, ஆஸ்திரேலியாவும் பிரிட்டனும் எச்சரிக்கைகள் விடுத்தன.

