ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டவர் என்ற சந்தேகத்தின்பேரில் யாரும் இனி தனிமைப் படுத்தப் படத் தேவையில்லை என சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்தது. சிங்கப்பூரில் இதுவரையிலும் ஸிக்கா கிருமியால் கடுமையான பாதிப்பு எதுவும் இல்லை. ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் என உறுதி செய்யப்பட்ட எவரும் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டாலொழிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறத் தேவையில்லை. சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இதனைத் தெரிவித்தது. ஸிக்கா பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற அறிகுறி தென் படுவோர், ஸிக்கா கிருமிகள் இருப்பதாகக் கண்டறியப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள், வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் என யாராக இருந்தாலும் அனைத்து சிங்கப்பூரரும் சோதனை செய்து கொள்ளும் வகையில் மருத்துவ உதவி நீட்டிக்கப்படும் என்றும் அமைச்சு தெரிவித்தது. இவர்கள் கழிவுக் கட்டணமான $60 வெள்ளிக்கு பொது மருந்தகங்களில் சோதனை செய்து கொள்ளலாம்.
தலைவலி, மூட்டுவலி, தசை வலி, கண் சிவத்தல் போன்றவை ஸிக்கா கிருமி பாதிப்புக்கான அறிகுறி என்று கூறப்படுகிறது. முதன்முதலில் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டவர் அறியப் பட்டு ஒரு வார காலத்திற்குப் பிறகுதான் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அல்ஜுனிட், சிம்ஸ் டிரைவ், காலாங் வே, பாய லேபார் வே ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. புதிதாக பிடோக் நார்த் அவென்யூ 3, ஜூ செங் ரோடு ஆகிய பகுதிகளில் ஸிக்கா பாதிப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. புதிதாக இப்போது 16 பேர் ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித் தது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டவர் களுடன் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளுடன் தொடர்புகொண்டவர்களா என்ற விவரம் வெளியிடப் படவில்லை. இதுவரையிலும் 258 பேர் ஸிக்கா கிருமியால் பாதிக் கப்பட்டுள்ளனர்.
ஏடிஸ் கொசுக்கள் அதிகமான இடங்களில் இருப்பதை வைத்துப் பார்க்கும்போது ஸிக்கா மேலும் பல பகுதிகளுக்குப் பரவக்கூடும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அவ்வாறு கிருமிகள் பரவுவதைக் கட்டுப்படுத்த டெங்கி யைத் துடைத்தொழிக்க பயன்படுத்திய அதே பாணி பின்பற்றப்படும் என்று சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் தெரிவித்தன. ஸிக்கா கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனை அல்லது மருந்தகங்களில் தங்களது சிறுநீர், இரத்த மாதிரிகளைச் சோதனைக்காகக் கொடுத்துவிட்டு, சோதனை முடிவைப் பெறு வதற்காக வீட்டில் காத்திருக் கலாம். ஸிக்கா கிருமி பாதித் துள்ளது கண்டறியப்பட்டு மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டா லொழிய அவர் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறத் தேவையில்லை. இதற்கு முன்னர் நோயாளிகள், மருத்துவச் சோதனையின் முடிவு தெரியும் வரை 12 மணி நேரத்திற்குத் தடுத்து வைக்கப்பட்டனர்.

