ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்கு சிங்கப்பூர் கூடுதலாக 120 இடங்களை வரும் ஆண்டுகளில் பெறும் என்று முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் யாக்கூப் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். இதற்கான இரு காரணங்களை அமைச்சர் முன்வைத்தார். ஒன்று, சிங்கப்பூரின் மக்கள் தொகை அதிகரித்து இருப்பதை சவூதி அதிகாரிகள் புரிந்துகொண்டுள்ளனர். மற்றது முன்னைய சிங்கப்பூர் ஹஜ் பயணிகள் நாட்டின் நற்பெயரைக் கட்டிக்காத்து வந்துள்ளனர் என்றார். ஹஜ் பயணத்துக்குக் "காத்திருக்கும் காலம் தற்போது 15 ஆண்டுகளாக உள்ளது. சமூகத்தில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது என்பதை நாங்கள் அறிவோம்" என்றார் டாக்டர் யாக்கூப். சாங்கி விமான நிலையத்தில் 467 பேர் அடங்கிய பெரிய அளவிலான ஹஜ் பயணிகளை நேற்று சவூதி அரேபியாவுக்கு அமைச்சர் வழியனுப்பி வைத்தார்.
இந்த ஆண்டு சிங்கப்பூர் மொத்தம் 680 பயணிகளை ஹஜ் பயணத்துக்கு அனுப்புகிறது. இதில் 90% முதல் முறையாகச் செல்பவர்கள். அவர்களுடன் முயிஸை சேர்ந்த 21 அதிகாரிகளும் செல்வர். அவர்கள் மருத்துவ, நலவாழ்வு சேவைகளை வழங்குவார்கள். கடந்த மூன்று ஆண்டுகளாக ஹஜ் பயணத்துக்கு சிங்கப்பூர் அரசாங்கம் அதிக இடங்களை சவூதி அரேபியாவிடம் கேட்டு வருகிறது.

