ஜென்டிங் ஹைலண்ட்ஸ் சென்று திரும்பும் வழியில் சென்ற வாரம் விபத்தில் சிக்கி, பலத்த காயமடைந்த 62 வயது சிங்கப்பூரர் ஞாயிறு காலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆகஸ்ட் 31ஆம் தேதி நடந்த அந்த விபத்தில் திரு லிம் சியா தியனுக்கு பலத்த மூளைக் காயம் ஏற்பட்டது. அவருக்கு கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்று கொம்பாக் போலிஸ் தலைமை அதிகாரி பெர்மானா செய்தி நிறுவனத்திடம் கூறினார். 12 பயணிகளுடன் ஜென்டிங் ஹைலண்ட்ஸில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிக் கொண்டிருந்த கிராஸ்லேண்ட் சுற்றுப்பயணப் பேருந்து சாலையைப் பிரிக்கும் தடுப்பில் மோதியதில் தலைகீழாகக் கவிழ்ந்தது. 12 பயணிகளில் 9 பேர் சிங்கப்பூரர்கள். அவர்கள் அனைவரும் விபத்தில் காயமடைந்தனர்.
செப்டம்பர் முதல் தேதி அன்று கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு முன்னதாக, திரு லிம்முக்கு பென்டோங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஞாயிறு அன்று திரு லிம்மை சிங்கப்பூருக்கு ஆம்புலன்ஸ் வண்டியில் அழைத்து வர அவரது குடும்பத்தினர் திட்ட மிட்டிருந்தனர். ஆனால் கடுமையான காயங்கள் அவரது உயிரைப் பறித்துவிட்டன. அவரது உடல் ஞாயிறு இரவு சிங்கப்பூருக்குக் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, கோலாலம்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றொரு சிங்கப்பூரரான 52 வயது திரு ஆர். மனோகரனின் உடல் நிலைமையும் மோசமாக உள்ளது. அவரை சிங்கப்பூருக்கு சிகிச்சைக்கு அழைத்து வர அவரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். ஆனால் அதற்கு மருத்துவர்கள் ஆதரவளிக்கவில்லை. அவரது இரு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாக அவருடன் இருக்கும் அவரது உறவினர் வி.சந்திரலேகா தெரிவித்தார்.
முடி திருத்தரான திரு மனோகரனுக்கு விபத்தில் ஒரு கை உடைந்ததுடன் மணிக்கட்டு எலும்பும் முறிந்தது. நுரையீரலிலும் ஓட்டை ஏற்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவருக்கு இன்னும் நினைவு திரும்பவில்லை.
சென்ற புதன்கிழமை சாலையைப் பிரிக்கும் சுவரில் மோதி விபத்துக்குள்ளான பேருந்து. படம்: தி ஸ்டார்

