சுதாஸகி ராமன்
மருத்துவமனைகளிலும் பலதுறை மருந்தகங்களிலும் காணப்படும் பரபரப்பான சூழலால் மருந்துகளை முறையாக உட்கொள்வது பற்றிய ஆலோசனைகள் சில நேரங்களில் முதியோருக்குக் கிடைக்காமல் போகலாம். இதில் உதவிக்கரம் நீட்டும் வகையில், முதியோர் வசிக்கும் இடங்களுக்கே சென்று அவர்களுக்கு ஆலோசனை வழங்க வகை செய்கிறது கடந்த சில ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் ஒரு சமூகத் திட்டம். மருந்துகளை உட்கொள்வதன் முக்கியத்துவம், குறிப்பிட்ட நேரத்தில் சரியான அளவில் மருந்து களை உட்கொள்வது போன்றவற்றை முதியோருக்கு எடுத்து உரைக்கிறது 'உங்கள் மருந்துகளை சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள்' (Know Your Medicine, Get It Right!) திட்டம்.
கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் மருந்தகத்துறை சங்கம், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் மருந்தகத் துறை சங்கத்துடனும் வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றத்துடனும் ஒன்றிணைந்து இந்தத் திட்டத்தை நடத்தி வருகிறது. தேசியப் பல்கலைக்கழகத்தின் மருந்தகத் துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் சி. புனிதா, 21, மாணவர் குழுவிற்கான திட்ட இயக்குநராக லிம்பாங் வட்டாரத்தில் இத்திட்டத்தைச் செயல் படுத்துவதில் பங்காற்றினார். "நிகழ்ச்சி நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக, வீடு வீடாகச் சென்று அந்த வட்டாரத்தில் வசிக்கும் முதியோருக்கு நிகழ்ச்சி குறித்துத் தெரிவித்தோம். அவர்கள் நிகழ்ச்சி அன்று தங்களது மருந்துகளை எடுத்துவந்து ஆலோசனை பெற்றனர்," என்றார் புனிதா. லிம்பாங் வட்டாரத்தின் 7 புளோக்குகளில் வசித்துவரும் 110 முதியோர் இந்தத் திட்டம் வழி மருந்துகளை முறையாக உட்கொள்வது பற்றித் தெரிந்து கொண்டனர்.
முதியோர் ஒருவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யும் சி.புனிதா. படம்: வடமேற்கு சமூக மேம்பாட்டு மன்றம்

