சிங்கப்பூரில் மேலும் 12 பேருக்கு ஸிக்கா நோய்த் தொற்றியிருப்பதாக அதிகாரிகள் நேற்று உறுதிப்படுத்தினர். இவர்களையும் சேர்த்து மொத்தம் 304 பேரை ஸிக்கா பாதித்திருக்கிறது. புதிய நோயாளிகள் 12 பேரில் 10 பேர் அல்ஜுனிட் கிரசெண்ட், சிம்ஸ் டிரைவ், காலாங் வே, பாய லேபார் வே வட்டாரத்துடன் தொடர்புடையவர்கள். ஒருவர் எலைட் டெர்ரஸ் பகுதியைச் சேர்ந்தவர். அந்த நோய்த் தொற்றிய மற்றொருவர் ஸிக்கா தொற்றியிருக்கும் இடங்களில் எந்த இடத்துடன் தொடர்புள்ளவரா என்பது பற்றி தெரியவில்லை என்று சுகாதார அமைச்சும் தேசிய சுற்றுப்புற வாரியமும் கூட்டறிக்கையில் தெரிவித்திருக்கின்றன. ஸிக்கா தொற்றும் வட்டாரங்களில் தொடர்ந்து மருந்து அடிக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் அந்த வட்டார மக்களுடன் தொடர்புகொண்டு ஆலோசனை கூறி வருவதாகவும் வாரியம் தெரிவித்தது.
செப்டம்பர் மாதம் 8ஆம் தேதி நிலவரப்படி மொத்தம் 183 கொசு இனப்பெருக்க இடங்கள் கண்டறியப்பட்டு அழிக்கப்பட்டன. அவற்றில் 114 இடங்கள் வீடுகளில் காணப்பட்டன. 69 இடங்கள் இதர கட்டடங்களிலும் பொது இடங்களிலும் காணப்பட்டன. சென்ற வார முடிவில் இடம்பெற்ற மக்களை எட்டும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்த வார முடிவிலும் சிங்கப்பூர் முழுவதும் ஸிக்காவிற்கு எதிரான இயக்கம் இடம்பெறும் என்று வாரியம் தெரிவித்துள்ளது. தேங்கிக்கிடக்கும் தண்ணீரை அகற்றுவது, குப்பை போடாமல் இருப்பது உள்ளிட்ட காரியங்களைச் செய்து அதன் மூலம் ஸிக்கா கொசுவை ஒழிக்கும் ஒட்டுமொத்த முயற்சியில் பங்கெடுத்துக்கொள்ளும்படி வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது. ஸிக்கா பற்றிய விவரங்களைத் தனது இணையப்பக்கத்தில் பொதுமக்கள் காணலாம் என்று வாரியம் குறிப்பிட்டுள்ளது.

