சிங்கப்பூர்-மலேசியா தமிழ் மொழிபெயர்ப்புப் பரிமாற்றுத் திட்டத்தின் ஓர் அங்கமாக மலேசிய அரசாங்கத்தின் செய்தி நிறுவனமான பெர்னாமா, மலேசிய தமிழ்ப் பத்திரிகைகளான தமிழ் நேசன், மக்கள் ஓசை, வானொலி நிறுவனங்களான டி.எச்.ஆர்.ராகா, மின்னல் எஃப்.எம், 'ஓம்' தமிழ் இணையத் தொலைக்காட்சி ஆகியவற்றைச் சேர்ந்த ஆசிரியர்கள், செய்தியாளர்களுடன் மலாயா பல்கலைக்கழகம், ஜோகூர் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த கல்வியாளர்களும் நேற்று தமிழ் முரசு அலுவலகத்துக்கு வருகையளித்தனர். அவர்களுடன் நாடாளுமன்றத்தின் மொழித் துறைத் தலைவர் அ.பழனியப்பன், தகவல் தொடர்பு அமைச்சின் தமிழ் மொழிப் பிரிவின் அதிகாரிகளும் வந்தனர். தமிழ் முரசின் மொழி பெயர்ப்பு முறைகள், செய்தியாக்கம், பக்க உருவாக்கம், செய்தித் தேர்வு போன்ற செயல்பாடுகள் பற்றித் தெரிந்துகொண்டனர்.
"சிங்கப்பூரின் ஊடகச் செயல்பாடுகளை நேரில் கண்டறிவது இதுவே முதல் முறை," என்ற மின்னல் எஃப்.எம். படைப்பாளர் ரவீந்திரன், சிங்கப்பூரின் தமிழ்ச் சூழல் பற்றி அறிந்துகொள்ள இந்தப் பயணம் வழி வகுத்தது," என்றார். தமிழ் மொழி எல்லா நாட்டுத் தமிழர்களையும் ஒன்றிணைக் கிறது என்ற மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு சுப்பிரமணி, "இத்தகைய முயற்சிகள் இரு நாட்டு ஊடகங் களுக்குமிடையே நட்புப் பாலமாக அமைகிறது," என்றார்.
கடந்த 10 ஆண்டுகளாக டிஎச்ஆர் ராகா வானொலியில் படைப்பாளராகப் பணியாற்றும் ரேவதி, இத்தகைய பரிமாற்றுத் திட்டங்கள் அண்டை நாடுகளில் உள்ள தமிழ்ப் புழக்கம் குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள உதவுகின்றன என்றார். தமிழ் நேசன் செய்தித்தாளின் செயல்பாடுகள் குறித்து விளக்கினார் அதன் ஆசிரியர் கே.பத்மநாபன். "செய்தித்துறையில் பணிபுரி பவர்கள் நேரம், காலம் பார்க்க முடியாது. ஆனால், பல விஷ யங்களைக் கற்றுக்கொள்ள முடியும். அதனால் இத்துறை மிகவும் உயர்ந்த ஒரு துறை," என்றார் அவர்.
மலாயா பல்கலைக்கழக விரிவுரையாளர் திரு எஸ்.சுப்பிரமணி, தமிழ் நேசன் ஆசிரியர் திரு கே.பத்மநாபன், மக்கள் ஓசை செய்தியாளர் சுரேந்திரன் சுந்தரராஜ், மின்னல் எஃப்.எம் படைப்பாளர் ரவீந்திரன் சண்முகம் ஆகியோர் தமிழ் முரசின் ஆசிரியர் குழுவினருடன் உரையாடுகின்றனர். படம்: எஸ்.பி.பட்டு

