வீவக எனும் வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள தொழில்துறை நிலங்களும் சொத்துகளும் இனி 'ஜெடிசி'(JTC) நிறுவனத்தின் கீழ் வரவிருப்பதாக நேற்று தெரிவிக்கப்பட்டது. 2018 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இந்த மாற்றம் நடப்புக்கு வரும். இந்தத் தகவலை வர்த்தக தொழில் அமைச்சர் (வர்த்தகம்) திரு லிம் ஹங் கியாங் நேற்று அறிவித்தார். 'கிரிட்சோ சிங்கப்பூர்', 'குவோக்சின் மெனுஃபேக்சரிங்' 'ராயல் பூசான்' ஆகிய மூன்று நிறுவனங்களும் நேற்று நிலக் குத்தகை உடன்பாட்டில் கையெழுத்திட்ட நிகழ்ச்சியின்போது அமைச்சர் பேசினார்.
சிறிய நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சிக்கு இந்த மாற்றம் உதவும் என்றார் அமைச் சர். இனி அனைத்து தேவை களுக்கும் நிறுவனங்கள் ஒரே அமைப்பை நாடலாம் என்றார் அவர். மேலும் நிறுவனங்களின் வளர்ச்சிக்கேற்ப அவற்றின் இடத் தேவையும் மாறும். நிறுவனங்களுக்குச் சிறந்த முறையில் உதவ இந்த மாற்றம் வழி வகுக்கும் என்று அவர் விளக்கினார். இந்தப் புதிய மாற்றத்தால் அரசாங்கம் புதிய தொழில்துறை வட்டாரங்களுக்குரிய விரிவான பெருந்திட்டத்தை வரைய உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வீடமைப்பு வளர்ச்சிக் கழகத்தின் கீழ் உள்ள 10,700 தொழில்துறை பகுதிகளும் 540 தொழில்துறை நிலக்குத்தகைகளும் ஜெடிசிக்கு மாற்றப்படும். அடுத்த இரண்டு மாதங்களில் குத்தகையாளர்கள், வர்த்தகச் சங்கங்கள் போன்ற தரப்புகளுடன் தாங்கள் கலந்தாலோசிக்க இருப்பதாக ஜெடிசியும் வீவகவும் நேற்று இணைந்து வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

