லிட்டில் இந்தியா வட்டாரத்தில் புதிதாக ஸிக்கா கிருமித் தொற்று பரவும் பகுதி கண்டறியப்பட்டதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தனது இணையத்தளத்தில் தெரிவித்தது. வீராசாமி ரோட்டில் உள்ள புளோக் 633ல் இரண்டு ஸிக்கா கிருமித் தொற்றுச் சம்பவங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக வாரியம் குறிப்பிட்டுள்ளது. கடந்த இரு வாரங்களாக கிருமித் தொற்றுக்கான அறிகுறிகள் அப்பகுதியில் தென்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஸிக்கா கிருமி பரவும் மையங்கள் இரண்டு கண்டறியப்பட்டன. உபி அவென்யூ 1, ஜாலான் செங்காக்/ஜாலான் ராயா ஆகிய பகுதிகள் அவை. உபி அவென்யூ 1ல் இம்மாதம் 13ஆம் தேதி நான்கு ஸிக்கா கிருமித் தொற்றுச் சம்பவங்களும் ஜாலான் செங்காக்/ஜாலான் ராயாவில் கடந்த திங்கட்கிழமை மூன்று சம்பவங்களும் பதிவாயின.
முதன்முதலாகக் கண்டறியப்பட்ட ஆகப் பெரிய ஸிக்கா கிருமிப் பரவல் பகுதியான அல்ஜுனிட் கிரசென்ட்/சிம்ஸ் டிரைவ் சோதனை முடிந்து மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் லிட்டில் இந்தியா வட்டாரப் பகுதி தெரிய வந்துள்ளது. அல்ஜுனிட் பரவல் பகுதி மூடப்பட்டாலும் இம்மாதம் 31ஆம் தேதி வரையில் அப்பகுதி அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று வாரியம் குறிப்பிட்டுள்ளது. லிட்டில் இந்தியா வட்டாரத்தில் பதிவு செய்யப்பட்ட இரு சம்பவங்களைத் தொடர்ந்து நேற்று மாலை 3 மணி வரையிலான நிலவரப்படி சிங்கப்பூரின் ஸிக்கா கிருமித் தொற்றுச் சம்பவங்களின் எண்ணிக்கை 415 ஆனது.

