அதிகமான துறைகள் தங்களை மாற்றியமைத்து வரும் வேளையில், ஊழியர்களும் தகுந்த திறன், பயிற்சிகளைப் பெற வேண்டியுள்ளது. இதில், திறன் பெற்ற ஊழியரணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றும் பெரியோர் கல்வித்துறையும் மேம்பாடு காண வேண்டியுள்ளது. மாறி வரும் பொருளியல், தொழில்துறைகளுக்கு ஏற்ப பெரியோர் கல்வித் துறை தொடர்ந்து செயல்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் (உயர் கல்வி, திறன்கள்) ஓங் யி காங் கூறியுள்ளார். இதன் அடிப்படையில், சிங்கப்பூரிலுள்ள தொடர் கல்வி, பயிற்சி முறைகளின் தரத்தை மேம்படுத்தி, புதுப்பிக்கும் நோக்கில் ஐந்து ஆண்டு கால புதுப்பிப்புத் திட்டம் நேற்று அறிவிக்கப்பட்டது.
வேகமாக மாறி வரும் புதிய பொருளியலுக்குத் தேவைப்படும் திறன்களை உருவாக்கும் வகை யில் பயிற்சி, பெரியோர் கல்வித் துறையின் புதுப்பிப்புத் திட்டம் எனும் அத்திட்டம் தேசிய ஸ்கில்ஸ்ஃபியூச்சர் இயக்கத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ளது. பெரியோர் கல்வித் துறையில் தற்போது கிட்டத்தட்ட 6,000 பெரி யோர் கல்வியாளர்களும் பாடத்திட்ட உருவாக்குநர்களும் உள்ளனர். பயிற்சி, பெரியோர் கல்வித் திறன் மன்றம், 150க்கும் மேற்பட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உருவாக்கியுள்ள இந்தத் திட்டத்தை அமைச்சர் ஓங், நேற்று மரினா பே சேண்ட்சில் தொடங்கிய பெரியோர் கல்வி மாநாட்டில் அறிவித்தார்.
"வெறுமனே விரிவுரை ஆற்றுவதும், குறிப்புகளைத் திரையில் காட்டுவதும் பயிற்சி அல்ல. பயிற்சி பெறுவோரின் கனவுகள், நம்பிக்கைகள், அவர்களிடையே உள்ள கவலைகளை அறிந்து அவர்களை மேம்படுத்த உதவுவது. அவர்களது திறன்களை மேம்படுத்தி, அவர்களது செயல்திறனை மேல்நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும்," என்றார் அமைச்சர்.

