மீன்பிடிப் படகில் 10 சிங்கப்பூரர்களை இந்தோனீசிய கடற்படை பிடித்தது

1 mins read
7dd3ac39-9970-4f78-b20f-dd53bcbb116f
-

இந்தோனீசிய கடற்படை, பிந்தான் தீவுக்கு அருகே மீன்பிடிப் படகு ஒன்றில் இருந்த 10 சிங்கப்பூரர்களைத் தடுத்துப் பிடித்தது. இந்தோனீசியாவில் பதிவு பெற்ற 'கேஎம் ராண் டாவ் பெர்துவா' என்ற அந்தப் படகு, வெள்ளிக்கிழமை யன்று பாத்தாம் தீவில் இருந்து லாகோய் கரைக்குச் சென்று கொண்டு இருந்தது. அதில் 12 பயணிகளும் மூன்று சிப்பந்திகளும் இருந்தனர். பயணிகளில் இரண்டு பேர் இந்தோனீசியர்கள். 10 பேர் சிங்கப்பூரர்கள்.

இந்த விவரங்களை அந்த நாட்டின் கடற்படை தன் இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. பரிசோதித்துப் பார்த்ததில் அந்தப் படகிடம் அவசியமான பயண அனுமதி இல்லை. அதன் பாதுகாப்புச் சான்றிதழ் காலாவதியாகி இருந்தது. அதோடு, சிப்பந்திகள், பயணிகள் விவரம் எதுவுமின்றி படகு பயணம் செய்தது என்று அது தெரிவித்தது. தடுத்துவைக்கப்பட்டுள்ள சிங்கப்பூரர்களுக்கு வயது 33 முதல் 55 வரை. இரண்டு பேரிடம் கடவுச்சீட்டு இல்லை. அந்தப் படகு சுமத்ராவின் கிழக்குக் கடற்பகுதியில் இருக்கும் பெலிதுங் தீவில் உள்ள அதன் மெண்டிகி தளத்துக்குக் கொண்டுசெல்லப்படும்.

பிந்தான் தீவு அருகே வெள்ளிக்கிழமை பிடிபட்ட பயணிகளில் 10 பேர் சிங்கப்பூரர்கள் என்று இந்தோனீசிய கடற்படை தெரிவித்துள்ளது. படம்: இந்தோனீசிய கடற்படை இணையத்தளம்