வங்கியில் கடன் பெற தில்லுமுல்லு: சந்தேகப் பேர்வழிகள் 16 பேர் கைது

வங்கியில் கடன் பெற தில்லுமுல்லு: சந்தேகப் பேர்வழிகள் 16 பேர் கைது

1 mins read

வங்கியிலிருந்து கடன் பெறுவதற்காக தில்லுமுல்லுச் செயல்களில் ஈடுபட்டிருப்பதாகச் சந்தேகிக்கப்படும் 16 பேர் சென்ற வாரம் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் 11 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். அவர்களுக்கு வயது 24 முதல் 56 வரை. கடன் பெற விண்ணப்பித்தபோது சிலர் தங்களுடைய ஆண்டு வருமானம் பற்றி பொய் தகவல்களைத் தெரிவித்ததாக இந்த மாத தொடக்கத்தில் ஒரு வங்கி போலிசிடம் புகார் தெரிவித்தது. கடன் கொடுக்கப்பட்டதும் அது திருப்பி அடைக்கப்படவில்லை. கடன் வாங்கியவர் களுடன் தொடர்புகொள்ளவும் முடியவில்லை என்று புகாரில் அந்த வங்கி கூறியது.

இதனையடுத்து போலிஸ் புலன்விசாரணையைத் தொடங்கியது. சந்தேகப்பேர்வழிகள் தில்லுமுல்லு செய்யப்பட்ட வேலை நியமனக் கடிதங்களைப் பயன்படுத்தி அவற்றை வங்கிகளுக்கு அனுப்பி வங்கிகளிடமிருந்து கடன்பெற முயன்றிருக்கிறார்கள் என்பது தொடக்க புலன்விசரணை மூலம் தெரியவந்ததாக போலிஸ் அறிக்கை நேற்று குறிப்பிட்டது. இப்படி தில்லுமுல்லு செய்து பெறப்பட்ட மொத்த கடன்தொகை $189,000க்கும் அதிகம். அந்தச் சந்தேகப் பேர்வழிகள் பிப்ரவரி 22ஆம் தேதிக்கும் 24ஆம் தேதிக்கும் இடையில் தெம்பனிஸ், அங் மோ கியோ, தெலுக் ஆயர், புவாங் கோக் கிரீன் போன்ற வட்டாரங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் அதிகாரிகள் மேற்கொண்ட மூன்று நாள் நடவடிக்கையின்போது பிடிபட்டார்கள்.