கோலாலம்பூர்: சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியக் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட மற்ற நாடுகளின் உள்விவகாரங்களில் மலேசியா தலையிடாது என்று சிங்கப்பூருக்கான மலேசியத் தூதர் இளங்கோ கருப்பன் கூறியிருப்பதாக பெர்னாமா தகவல் தெரிவித்தது. ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற வழக்கு விசாரணையை மலேசியாவுக்கு மாற்றுவதற்கான நெருக்குதலைக் கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது பற்றி தங்களுக்குத் தெரியும் என்றும் திரு இளங்கோ கருப்பன் கூறினார். போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக சிங்கப்பூரில் மரண தண்டனையை எதிர்நோக்கும் மலேசியரான 30 வயது பிரபாகரன் சிங்கப்பூருக்கு எதிராக விசாரணை நடத்தக்கோரி மலேசிய உயர்நீதிமன்ற அலுவலகத்தில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் மனு தாக்கல் செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. பிரபாகரனுக்கு 2014 ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. சிங்கப்பூரில் அவர் செய்த அனைத்து விண்ணப்பங்களும் தோல்வி அடைந்தன.
சிங்கப்பூரின் மரண தண்டனை வழக்குகளில் மலேசியா தலையிடாது
1 mins read

