சிங்கப்பூர்-பிரான்ஸ் அணுக்க உறவு: இருநாட்டு அதிபர்கள் மறுஉறுதி

சிங்கப்பூர்-பிரான்ஸ் அணுக்க உறவு: இருநாட்டு அதிபர்கள் மறுஉறுதி

1 mins read

பிரான்சும் சிங்கப்பூரும் சிறப்பு வாய்ந்த ஒரு தோழமை உறவைக் கொண்டிருப்பதாக இரு நாடுகளின் அதிபர்களும் நேற்று தெரிவித்தனர். சிங்கப்பூருக்கு வருகை அளித்துள்ள பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹோலாண்ட்டை வரவேற்று நேற்று சிங்கப்பூரின் அதிபர் டோனி டான் கெங் யாம் விருந்தளித்துச் சிறப்பித்தார். அந்த விருந்தில் உரையாற்றிய டாக்டர் டான், பிரான்ஸ் நாட்டின் இப்போதைய அதிபரின் தலைமைத்துவத்தின் கீழ் இருதரப்பு உறவு பெரிதும் மேம்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார். இரு நாடுகளும் 2012ல் கையெழுத்திட்ட கூட்டுப் பங்காளித்துவ பிரகடனத்தை அதிபர் சுட்டிக்காட்டினார்.

தற்காப்பு, பாதுகாப்பு, கலாசாரத் துறைகளில் பிரான்சுடன் கூடிய சிங்கப்பூரின் ஒத்துழைப்பு அண்மைய ஆண்டுகளில் பலமடைந்து இருப்பதாகவும் அதிபர் குறிப்பிட்டார். சிங்கப்பூருக்கு பிரான்ஸ் நம்பத்தகுந்த தோழமை நாடு என்றார் டாக்டர் டான். ஐரோப்பிய ஒன்றியம்-சிங்கப்பூர் தாராள வர்த்தக உடன்பாடு நிறைவேற்றப்படுவதால் இந்த இரண்டு நாடுகளும் நம்பும் தாராள, ஒளிவுமறைவு இல்லாத வர்த்தக ஏற்பாடு இன்னும் பலப்படும் என்று டாக்டர் டான் குறிப்பிட்டார்.