சட்டத்துக்குப் புறம்பான கார் பந்தயத்தில் பங்கேற்றதுடன் காரை மணிக்கு 219 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டிய குற் றத்தை உணவு, பானத் துறையின் மேலாளர் ஒருவர் ஒப்புக்கொண்டுள்ளார். 2015ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் தேதி பின்னிரவு 12.16 மணிக்கு சிலேத்தார் நார்த் லிங்கை நோக்கிச் செல்லும் சிலேத்தார் லிங்க் சாலையில் தற்போது 37 வய தாகும் கூ குவோக் என் எனும் அந்த ஆடவர் தமது நிசான் ஜிடிஆர் காரில் அதிவேகத்தில் பயணம் செய்தார். அந்தச் சாலையின் வேக அளவு மணிக்கு 60 கிலோ மீட்டர்தான்.
கூவுடன் போட்டியிட்டார் லம்போகினி காரை ஓட்டிய 24 வயது கெவின் பிரதாமா சந்திரா. இருவரும் தங்கள் கார்களை அதிவேகமாக ஓட்டி, ஓர் இடத்தில் நின்று மீண்டும் தொடங்கிய இடத்துக்கு அதிவேகமாக வந்தனர். அவர்களைக் கண்காணித்து வந்த போக்குவரத்து போலிஸ் அதிகாரிகள் அவர்களை நிறுத்தி, அவர்களின் கார்களைப் பறிமுதல் செய்தனர். $5,000 பிணையில் விடுவிக்கப்பட்ட கூ, ஏப்ரல் 13ஆம் தேதி நீதிமன்றத்தில் முன்னிலையாவார்.

