தன்னுடைய நண்பர் மூன்றாண்டு காலத்தில் மூன்று முறை தனிநபர் உடலுறுதித் தேர்வில் கலந்துகொள்ள சட்டவிரோதமாக உதவிய ஆடவர் ஒருவருக்கு நேற்று $5,000 அபராதம் விதிக்கப்பட்டது. லீ ரோங் சி, 29, என்ற ஆடவர் சுரங்கத் தொழில் நிறுவனத்தில் வேலை செய்கிறார். மெல்வின் செங் ஜுன் லோங், 29, என்பவருடன் சேர்ந்து சதி செய்து உடலுறுதித் தேர்வு அதிகாரியை தான்தான் செங் என்று நம்பச் செய்து அதன்மூலம் லீ ஏமாற்றி இருக்கிறார் என்ற குற்றச்சாட்டை லீ ஒப்புக்கொண்டார். இந்தக் குற்றச்செயல் சென்ற ஆண்டு ஜூலை 16ஆம் தேதி மஜு டிரைவில் இருக்கும் மஜு முகாமில் நடந்தது. இதைப்போன்ற இதர இரண்டு குற்றச்செயல்கள் தண்டனை விதிக்கப்பட்டபோது கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
செங் சென்ற ஆண்டு ஜூலை 14ஆம் தேதி லீயை அணுகினார் என்றும் தனக்குப் பதிலாக உடலுறுதித் தேர்வில் தனக்காக கலந்து கொள்ளும்படி லீயை அவர் கேட்டார் என்றும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. தனக்கு வேலை அதிகமாக இருக்கிறது என்றும் அந்தத் தேர்வில் தான் தேர்ச்சி அடைவது சந்தேகமே என்றும் லீயிடம் செங் கூறினார். அதற்கு லீ ஓப்புக்கொண்டார்.

