சிங்கப்பூரில் பல மாத எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் சில்லறை வர்த்தகக் கடை ஆர்ச்சர்ட் ரோட்டில் நேற்று முற்பகல் 10 மணிக்குத் தன் கதவைத் திறந்தது. அந்தக் கடையில் முதல்முதலாக பொருள் வாங்கவேண்டும் என்ற ஆவலுடன் வெள்ளிக் கிழமை இரவு 8 மணி முதலே அங்கு வரிசை பிடித்து நின்ற சீன நாட்டவரான சியாங் ஜியாசின் என்பவர் கடையில் நுழைந்த முதல் வாடிக்கையாளராக ஆனார். மக்காவ்வில் ஹோட்டல் ஒன்றில் பணிபுரியும் 25 வயது சியாங், தான் சீனாவில் இருக்கும் நான்ஜிங், குவாங்சூ, ஆகிய நகர்களிலும் மக்காவ்விலும் ஆப்பிள் கடைகள் திறக்கப்பட்டபோது அங்கு இருந்ததாகக் கூறினார்.
அவரை ஆப்பிள் கடை ஊழியர்கள் மனமுவந்து வரவேற்றனர். 'ஆப்பிள் ஆர்ச்சர்ட் ரோடு' என்ற இந்தக் கடைதான் சிங்கப்பூரிலும் தென்கிழக்கு ஆசியாவிலும் இப்போது செயல்படும் முதல் அதிகாரபூர்வ ஆப்பிள் கடையாகும். அது நைட்ஸ்பிரிட்ஜ் கடைத்தொகுதியில் இரண்டு மாடிகளில் அமைந்திருக்கிறது. ஆப்பிள் கடை பற்றி 2015 அக்டோபரிலேயே பேச்சு அடிபட்டது. இந்தக் கடையின் முதல் மாடிக்குப் போவோர் ஐபோன், ஐபேடு, மேக்புக், ஐமேக் போன்ற ஆப்பிள் தயாரிப்புகளையும் உபரி பொருட்களையும் வாங்கலாம். இரண்டாவது மாடியில் ஐபோன் புகைப்படம் போன்ற பல வசதிகளையும் இலவசமாகப் பரிசோதித்துப் பார்க்கலாம்.
சீன நாட்டவரான சியாங் ஜியாசின், 25, வெள்ளிக்கிழமை இரவு 8 மணி முதல் ஆப்பிள் ஆர்ச்சர்ட் ரோடு கடையில் வரிசையில் காத்திருந்தார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

