ஜூரோங்கில் டுரியான் பறிக்கச் சென்றவர் நான்கு நாட்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டார் கடந்த வியாழக்கிழமை டுரியான் பறிக்கச் சென்ற பிறகு காணாமல் போன 57 வயது ஆடவர், நான்கு நாட்களுக்குப் பிறகு நேற்று நண்பகல் வாக்கில் கிராஞ்சி விரைவுச்சாலைக்கு அருகிலுள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார். திரு லோ ஆ கே ஜூலை 6ம் தேதி காலை 8.30 மணியளவில் ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 41ன் கட்டடம் 498ல் கடைசியாகக் காணப்பட்டதாகக் காவல்துறை முன்னதாகத் தகவல் தேடியபோது தெரிவித்தனர். அவர் வெள்ளை நிறச் சட்டையும், முழுக்கால் சட்டையும், மஞ்சள் காலணியும் அணிந்திருந்தார். அவர் டுரியான் பறிப்பதற்காக ஜூரோங்கிலுள்ள காட்டுப் பகுதிக்குத் தனது மோட்டார் சைக்கிளில் சென்றதாக நம்பப் படுவதாக லியன்ஹ வன்பாவ் செய்தித்தாள் நேற்று தெரிவித்தது.
அவர் காணாமல் போன பிறகு காவல்துறையினர் அவரது குடும்பத்தினரும் அவரைத் தேடத் தொடங்கினர். ஜூரோங் சாலையோரத்திலுள்ள காட்டுப் பகுதியில் அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து தேடினார்கள். வன்பாவ் செய்தியாளர்கள் ஞாயிறு இரவு அப்பகுதிக்குச் சென்றபோது, குறைந்தது ஐந்து போலிஸ் வாகனங்கள் அங்கிருந் தன. போலிஸ் நாய்களுடன் போலிஸ் அதிகாரிகள் தேடலில் ஈடுபட்டிருந்தனர். திரு லோவின் குடும்பத்தினர், நண்பர்கள் உட்படப் பத்துப் பேர் அருகில் தகவலுக்காகக் காத் திருந்தனர். ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணியிலிருந்து திங்கட் கிழமை அதிகாலை 4 மணி வரை 12 மணிநேரம் காவல்துறை யினர் தேடியதாக ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் அறிகிறது.
நான்கு நாட்களுக்கு முன் காணாமல் போனவரை மோப்ப நாய் உதவியுடன் (இடது படம்) போலிசார் தேடினர். இதற்கிடையே நேற்று அவர் காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டார். படம்: லியான்ஹ வான்பாவ், வான்பாவ் வாசகர்

