போலி நிறுவனங்களை உருவாக்கி, அவற்றின் மூலம் கள்ளத்தனமாக வெளிநாட்டு ஊழியர்களை சிங்கப் பூருக்கு வரவழைத்த கும்பல் பிடி பட்டது. ஜாலான் புசார், லிட்டில் இந்தியா, தோ பாயோ ஆகிய வட்டாரங்களில் குடியிருப்புகள், அலுவலகங்கள் மற்றும் ஊழியர் தங்குமிடங்களில் மனிதவள அமைச்சு அதிகாரிகள் 18 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். அந்த நடவடிக்கையில், சட்ட விரோதக் கும்பலைச் சேர்ந்தவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் மூவரும் வெளிநாட்டு ஊழியர்கள் பத்துப் பேரும் கைது செய்யப்பட்டனர்.
அடையாள அட்டைகள், கைபேசிகள், ஊழியர்களின் பெயர்ப் பட்டியல்கள், வங்கிப் பரிவர்த்தனை ரசீதுகள், சிங்பாஸ் சாதனங்கள், வேலைவாய்ப்பு ஆவணங்கள் ஆகியவையும் கைப் பற்றப்பட்டன. வெளிநாட்டு ஊழியர்களைக் கொண்டு வருவதற்காக இத்தகைய சட்டவிரோதக் கும்பல்கள் உண்மை யில் எந்தச் செயல்பாடும் இடம்பெறாத நிறுவனங்களைப் பெயருக்கு, அதாவது போலியாக ஏற்படுத்தும். பின்னர், சிக்கிக்கொண்டால் பழியைப் பிறர் மீது போடும் விதமாக அந்தப் போலி நிறுவனங்களின் இயக்குநர்களாகச் சிலரை நியமித்து, அவர்களின் சிங்பாஸை தவறாகப் பயன்படுத்தி, பொய்யான வேலை அனுமதிச்சீட்டு விண்ணப்பங்களை அந்தக் கும்பல்கள் சமர்ப்பிக்கும்.
சட்டவிரோத கும்பலைச் சேர்ந்தவர் எனச் சந்தேகிக்கப்படும் ஒருவரை கைது செய்த மனிதவள அமைச்சு அதிகாரிகள், அக்கும்பலுக்குச் சொந்தமான வாகனத்தில் ஆதாரங்கள் ஏதும் கிடைக்கிறதா என்றும் சோதனை செய்தனர். படம்: மனிதவள அமைச்சு

