நிர்வாணக் காட்சி: காதலியை மிரட்டியவருக்குச் சிறை, பிரம்படி

நிர்வாணக் காட்சி: காதலியை மிரட்டியவருக்குச் சிறை, பிரம்படி

1 mins read

தமது காதலி நிர்வாணமாக இருப்பதைக் காட்டும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு தமக்காக இரண்டு கைபேசித் திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திடாவிடில் புகைப்படங்களை அவரது பெற்றோரிடம் காட்ட இருப்பதாக மிரட்டிய ஆடவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மூன்று பிரம்படிகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்த மிரட்டல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதியன்று விடுக்கப்பட்டது. 26 வயது டேரல் சியோங் சி யோங்கும் அந்த 21 வயது பெண்ணும் காதலர்களாக இருந்தபோது அந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன.

சியோங்கின் மிரட்டலால் அச்சமடைந்த அந்தப் பெண் 3,143 வெள்ளி பெறுமானமுள்ள இரு கைபேசித் திட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு அவற்றின் மூலம் கிடைத்த இரண்டு புதிய கைபேசிகளை அவரிடம் கொடுத்தார். அந்தப் புதிய கைபேசிகளை சியோங் விற்று பணமாக்கினார். மிரட்டி பணம் பறிப்பது, வசிப்பிடத்தில் திருடுதல், உரிமம் இல்லாமல் கடன் கொடுப்பவர்களுக்கு உதவி செய்தல் ஆகிய குற்றங்களின் பேரில் தமக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றாச்சாட்டுகளை சியோங் நேற்று ஒப்புக்கொண்டார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் தேதியன்று தமது அண்ணனின் அறைக்குச் சென்று 1,000 வெள்ளி பெறுமானமுள்ள தங்கச் சங்கிலி, 1,000 வெள்ளி பெறுமானமுள்ள இரண்டு தங்க மோதிரங்கள், தக்கா‌ஷிமாயா கடைத்தொகுதி வழங்கிய 2,000 வெள்ளி பெறுமானமுள்ள பற்றுச்சீட்டுகள், 520 வெள்ளி ரொக்கம் ஆகியவற்றை சியோங் திருடினார். அதுமட்டுமல்லாது, கடன்முதலை நடவடிக்கைக்கு உதவும் வகையில் தமது வங்கி அட்டையையும் வங்கி கணக்கையும் கொடுத்திருந்தார்.