நாளிதழ்களைப் படிப்பது என்பது விற்பனை பிரதிநிதி திரு அப்துல் ரசாக்குக்கு இப்போது எளிதாகி விட்டது. சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனமும் கேலாங் வெஸ்ட் சமூக மன்றமும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் மூலம் இந்த வாய்ப்பு அங்குள்ள குடியிருப்பாளர்களுக் குக் கிட்டியுள்ளது. இம்மாதம் தொடக்கம் முதலே அப்பர் பூன் கெங் குடியிருப்பாளர்கள் தங்கள் அக்கம்பக்க சமூக மன்றத்தில் உள்ள மின்னிலக்கச் சாதனங்கள் மூலம் செய்திகளைத் தெரிந்துகொள்ள முடிகிறது. நேற்று 'டேப்லட்' சாதனம் மூலம் தமிழ் முரசின் செய்திகளைப் படித்துத் தெரிந்துகொண்ட 37 வயது திரு ரசாக் அதை அடிக் கடி பயன்படுத்த எண்ணியுள்ளார். "எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் இங்கு வந்து மின்னிலக்க செய்தித்தாட்களைப் படிப்பேன். தினமும் தமிழ் முரசை வாங்கிப் படிக்கும் எங்களுக்கு இனி கடையில் போய் தேடி வாங்க தேவை குறைந்து, இனி சமூக மன்றத்திலும் வீட்டிலும் திறன் பேசி மூலமாகவோ அல்லது 'ஐபேட்' போன்ற மின்னிலக்க தொடர்புக் கருவிகள் மூலமோ எளிதாகவும் விரைவாகவும் எங்கு சென்றாலும் படிக்கும் சௌகரி யத்தை ஏற்படுத்தியுள்ளது இந்தத் திட்டம்.
"பதிப்பாக்கப்பட்ட செய்தித் தாட்களில் உள்ள எழுத்துகளை நாம் பெரிதாக்கிப் பார்க்க முடி யாது. ஆனால், டேப்லட் மூலம் செய்தித்தாட்களில் உள்ள எழுத்து களைப் பெரிதுப்படுத்தி பார்க்க முடிகிறது. "அண்மையில் திறன்பேசியைப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட என் தாயார் இனி எளிதாக மின் னிலக்கத் தொடர்புக் கருவிகள் மூலம் செய்தித்தாளை சமூக மன் றத்திற்கு சென்றும் வீட்டிலிருந்தும் வாசிப்பார் என்று நம்புகிறேன்," என்று திரு ரசாக் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
கேலாங் வெஸ்ட் குடிமக்கள் ஆலோசனைக் குழுவின் தலைவர் திரு சியாங் ஹெங் லியாங் (வலது), கேலாங் வெஸ்ட் சமூக மன்ற நிர்வாகக் குழுத் தலைவர் திரு குவா சூன் யாவ் (இடது) ஆகியோர் முன்னிலையில் டேப்லட் சாதனத்தில் தமிழ் முரசு மின்னிலக்க செய்தித்தாளைப் படிக்கிறார் அப்துல் ரசாக். படம்: திமத்தி டேவிட்

