சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த லாரி ஓட்டுநருக்குச் சிறை, தடை

1 mins read

கவனக்குறைவுடன் லாரி ஓட்டிய இந்திய நாட்டவரான 25 வயது தனபால் பாலசந்தருக்கு நான்கு வாரச் சிறைத் தண்டனையும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப் பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதியன்று யீ‌ஷூன் தொடக்கக் கல்லூரியில் உள்ள கட்டுமானத் தளத்திலிருந்து லாரியை ஓட்டி வெளியே வந்த தனபால் அவ்வழியாக மின் சைக்கிள் ஒன்றை ஓட்டிச் சென்றுகொண்டிருந்த 54 வயது சூ ஜின்ஃபு மீது மோதினார். விபத்துக்குள்ளான சூ, கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார். அவருக்கு விலா எலும்புகள் முறிவு, தலையிலும் கைகளிலும் கால்களிலும் காயங்கள் ஏற்பட் டிருந்ததாகப் பிரேதப் பரிசோதனை யில் தெரிய வந்தது. கல்லூரி வளாகத்தை விட்டு லாரியை ஓட்டிச் சென்ற தனபால், சாலை விதிமுறைகளின்படி லாரியை நிறுத்தவேண்டிய இடத்தில் நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டியதை அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டினர். அந்த நேரத்தில் தனபால் லாரியை வேகமாக ஓட்டிச் செல்ல வில்லை என்றபோதிலும் அவரது இடது புறத்திலிருந்து வலது புறத்துக்கு மின் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த சூவை அவர் பார்க்கத் தவறினார்.