வடக்கு-தெற்கு ரயில் பாதையில் சமிக்ஞை பழுது காரணமாக நேற்று மாலை உச்சநேரத்தில் சேவைத் தாமதம் ஏற்பட்டது. அங் மோ கியோ அருகில் புதிய சமிக்ஞை முறை பழுதடைந் ததால் யீஷூன் நிலையத்துக்கும் மரீனா சவுத் பியர் நிலையத்துக்கும் இடையிலான பயண நேரம் வழக்கத்தைவிட கூடுதலாக 20 நிமிடங்கள் எடுக்கும் என்று எஸ்எம்ஆர்டி நிறுவனம் டுவிட்டர் மூலம் முதலில் தெரிவித்தது. இந்த இரண்டு நிலையங் களுக்கு இடையே இலவசப் பேருந்துச் சேவை வழங்கப்பட்டது. இதனை அடுத்து, இரவு 7 மணிக்குப் பயண நேரத்தை எஸ்எம்ஆர்டி நீட்டித்தது. யீஷூன் நிலையத்துக்கும் மரீனா சவுத் நிலையத்துக்கும் இடையிலான பயண நேரம் வழக்கத்தைவிட கூடுதலாக 40 நிமிடங்கள் எடுக்கும் என்று அது அறிவித்தது. தோ பாயோ நிலையத்தில் குறைந்தது ஒரு ரயிலிலிருந்து பயணிகள் இறக்கி விடப்பட்டனர். மாலை 5.35 மணி அளவில் அங் மோ கியோ அருகில் உள்ள சமிக்ஞை முறையில் பழுது ஏற்பட்டதாகவும் ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு அங் மோ கியோவுக்கும் பீஷானுக்கும் இடையே அவை மெதுவாகச் சென்றதாகவும் எஸ்எம்ஆர்டி கூறியது. இரவு 8.18 மணிக்கு ரயில் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக அறிவிக்கப்பட்டது.
மாலை உச்சநேரத்தில் வடக்கு-=தெற்கு ரயில் பாதையில் ஏற்பட்ட சேவைத் தாமதம் காரணமாகப் பயணிகள் பலர் சமூக ஊடகம் வாயிலாக அதிருப்தி தெரிவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் வாசகர்

